Last Updated : 31 Dec, 2019 08:51 PM

10  

Published : 31 Dec 2019 08:51 PM
Last Updated : 31 Dec 2019 08:51 PM

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: செவ்வாய் நள்ளிரவு முதல் நடைமுறை

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

புறநகர் ரயில்களைத் தவிர்த்து ரயில் டிக்கெட் கட்டணம் நாளை முதல் (2020, ஜனவரி 1-ம் தேதி) உயர்த்தப்படுகிறது என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ரயில்வே துறையிலும் எதிரொலித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் வரையிலான மாதங்களில் ரயில்வேக்கு ரூ.19 ஆயிரத்து 412 கோடி மட்டுமே சரக்கு போக்குவரத்தில் வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் ரயில்வே திட்டமிட்டதைக் காட்டிலும் மிகக் குறைவாகும்.

மேலும், ரயில் பயணிகள் கட்டணமும் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. ரூ.1.18 லட்சம் கோடி திட்டமிட்ட நிலையில் ரூ.99 ஆயிரத்து 223 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது

ஆனால், செலவின் அடிப்படையில் ரூ.97 ஆயிரத்து 265 மதிப்பிடப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.4 ஆயிரத்து 99 கோடி செலவாகியுள்ளது. பயணிகள் இயக்கத்துக்கான செயல்பாட்டு, இயக்க செலவைக் கூட சரிசெய்ய முடியாமல் ரயில்வே துறை திணறி வருகிறது. இதனால் பயணிகள் டிக்கெட் கட்டணம், சரக்குக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை ஆலோசித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி பயணிகள் ரயில் கட்டணத்தை அதிரடியாக ரயில்வே துறை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, புறநகர் ரயில்கள், புறநகர் ரயில்கள் சீசன் டிக்கெட் ஆகியவற்றின் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை தனது அறிக்கையில், " ரயில் நிலையங்களில் வசதிகளை அதிகப்படுத்துதல், நவீனப் பெட்டிகள் உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் பயணிகளுக்கு ஏராளமான வசதிகளை ரயில்வே துறை செய்து வருகிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையால் ரயில்வே துறை ஏற்பட்ட சுமையைக் கருதி இந்தக் கட்டணம் குறைந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது. எந்த வகுப்புப் பயணிகளையும் பாதிக்காத வகையில் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

புறநகர் அல்லாத பயணிகள் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குளிர்சாதன வசதி அல்லாத 2-ம் வகுப்பு சிட்டிங், 2-ம் வகுப்பு படுக்கை வசதி, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது

அதேபோல மெயில் ,எக்ஸ்பிரஸ் குளிர்சாதன வசதி அல்லாத 2-ம் வகுப்பு அமர்வு, 2-ம் வகுப்பு படுக்கை வசதி, முதல் வகுப்பு ஆகியவற்றின் டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதன வகுப்புகளில் ஏ.சி. சேர்கார், ஏ.சி.3 அடுக்கு படுக்கை வசதி, ஏசி 2 படுக்கை வசதி, ஏசி முதல் வகுப்பு ஆகியவற்றின் டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ஆகிய ரயில்களின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது.

டெல்லி-கொல்கத்தா இடையே செல்லும் ராஜ்தானி ரயில் 1,447 கி.மீ. பயணிக்கிறது. தற்போது கி.மீ.க்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளதால், இதில் கட்டணம் ரூ.58 அதிகரிக்கும்.

அதேசமயம், முன்பதிவுக் கட்டணம், சூப்பர் பாஸ்ட் கட்டணம் ஆகியவற்றில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது.

இதற்கு முன் கடைசியாக கடந்த 2014-15 ஆம் ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டது. சரக்குக் கட்டணம் 6.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதன்பின் ரயில்வே கட்டணம் நேரடியாக உயர்த்தப்படவில்லை. மாறாக பிளக்ஸி பேர் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுவிதா எஸ்பிரஸ், வந்தே பாரத், தேஜாஸ் ஆகியவற்றில் மற்ற ரயில்களைக் காட்டிலும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x