Published : 28 May 2014 08:39 AM
Last Updated : 28 May 2014 08:39 AM
சீமாந்திராவை ஸ்வர்ண (தங்கம்) ஆந்திராவாக மாற்றுவேன் என தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான என்.டி. ராமாராவின் பிறந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் கட்சி மாநாடாக தெலுங்கு தேச கட்சி நடத்துவது வழக்கம். என்.டி.ஆரின் 91-வது பிறந்த நாளையொட்டி, ஹைதராபாத்தில் உள்ள கண்டிபேட்டை பகுதியில் கட்சியின் 33-வது மாநில மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.
சீமாந்திராவில் ஆட்சியை பிடித்தது, மத்திய அரசில் அங்கம் வகிப்பது போன்றவற்றால் தொண்டர்களிடையே அதிக உற்சாகம் காணப்பட்டது.
மாநாட்டு விழாவில் பிறைச் சந்திரனைப்போன்ற வடிவில் மிக பிரம்மாண்ட மேடை அமைக் கப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றியை தொண்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஊழலுக்கு எதிராகத்தான் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டது. ஊழலை முற்றிலும் ஒழிப்பதன் மூலம், ஏழ்மையை நாட்டிலேயே இல்லா மல் செய்யலாம். சிலர் கஷ்டப் படாமல் சேர்த்த பணத்தின் மூலம் அரசியலுக்கு வருகின்றனர். அவர் களால் அரசியல் சீரழிந்து விடுகிறது.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத் தையும் நிறைவேற்றுவோம். விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்துதான், அவர்களது வங்கி கடனை முழுமையாக ரத்து செய்ய வாக்குறுதி அளிக்கப்பட்டது.. சீமாந்திராவை `தங்க ஆந்திரா’ வாக மாற்றி காட்டுவேன். நம் மாநிலத்தின் தலைநகரை டில்லிக்கு இணையாக நிர்மாணிப்போம்.
தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி யின் போதுதான் ஹைதராபாத் ஹை-டெக் நகரமாக உருவானது. இதேபோன்று சீமாந்திராவில் உள்ள 3 அல்லது 4 நகரங்கள் ஹைடெக் நகரங்களாக உருவாக்கப்படும். விவசாயம், குடிநீர், அடிப்படை வசதி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை காட்டாமல், ஊழல், விலைவாசி உயர்வு, தேவையில்லாத அரசியல் போன்ற காரணங்களால்தான் காங்கிரஸ் தேர்தலில் மண்ணைக் கவ்வியது. காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த கதியை பார்த்து மற்ற கட்சிகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
வரும் 2019 தேர்தலில், தெலுங்கு தேசம் தேசிய கட்சியாக தெலங்கானா, சீமாந்திரா, தமிழகம், கர்நாடகம், மஹாராஷ்டிரம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும். இம்மாநிலங்களில் வாழும் தெலுங்கு பேசும் மக்களின் பிரச்சனைகளுக்காக பாடுபடும். இந்த மாநிலங்கள் மட்டுமல்லாது, உலகமெங்கிலும் உள்ள தெலுங்கர்களின் பிரச்சினைகளுக்காகவும் தெலுங்கு தேசம் குரல் கொடுக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
மாநாட்டில், மத்திய அமைச்சர் அஷோக் கஜபதி ராஜு, நடிகரும் எம்.எல்.ஏ வுமான பாலகிருஷ்ணா, எம்.பி, எம்.எல்.ஏ க்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT