Published : 30 Dec 2019 06:31 PM
Last Updated : 30 Dec 2019 06:31 PM
கேரளாவின் கன்னூர் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய 80-வது இந்திய வரலாற்றுப் பேரவை மாநாட்டில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்குக் காரணமாக இருந்ததாக பேராசிரியர் இர்பான் ஹபீபை அவரது தகைசால் பதவியில் இருந்து அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கேரளாவின் கன்னூர் பல்கலைக்கழகத்தில் நேற்று இந்திய வரலாற்றுப் பேரவையின் கூட்டம் தொடங்கியது. இதில் தொடக்க உரையாற்ற அம்மாநில ஆளுநரும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான ஆரிப் முகம்மது கான் அழைக்கப்பட்டிருந்தார்.
தனது தொடக்க உரையில் ஆளுநர் ஆரீப் பேசுகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தன் கருத்துகளைப் பதிவு செய்ய முயன்றார். இதற்காக சுதந்திரப் போராட்ட தலைவர்களில் ஒருவரான அபுல் கலாம் ஆசாத்தின் கூற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இதுகுறித்து ஆளுநர் ஆரிப் கூறும்போது, ''பிரிவினையின்போது நம் நாட்டில் சில அழுக்குகள் தங்கி விட்டதாக மவுலானா அபுல் கலாம் ஆசாத் குறிப்பிட்டிருந்தார். அப்படி தங்கி நாறுகின்ற அழுக்குக் குழிகளான நீங்கள் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கிறீர்கள்'' எனத் தெரிவித்தார்.
அப்போது அந்த அரங்கின் பார்வையாளர்கள் இடையே குடியுரிமை மசோதா எதிர்ப்புப் பதாகைகளை சிலர் பிடித்திருந்தனர். இவர்களைக் குறிப்பிடும் வகையிலேயே தனது உரையில் அழுக்குக் குழிகள் என ஆளுநர் ஆரிப் கூறியது சர்ச்சையானது.
இதற்கு மேடையில் அமர்ந்திருந்த பேராசிரியர் இர்பான் ஹபீப், ஆளுநர் ஆரிப்பை நோக்கிச் சென்றார். எனினும், அவர் அருகில் செல்லாதபடி ஆளுநர் ஆரிப்பின் ஏடிசியும், பாதுகாவலர்களும் இர்பான் ஹபீபைத் தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் நிலவியது. இதில், பெரும்பாலான பார்வையாளர்கள் ஆளுநர் ஆரிப்பிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஆளுநர் ஆரிப் தன் உரையை முழுமைப்படுத்த முடியாமல் அரங்கில் இருந்து வெளியேறினார்.
இதனிடையே, கன்னூர் பல்கலைக்கழகத்தின் சம்பவத்திற்கு பேராசிரியர் இர்பான் ஹபீப் தான் காரணம் என அலிகரில் புகார் எழுந்துள்ளது. அவர் தான் பார்வையாளர்கள் ஆளுநர் ஆரிபிற்கு எதிராகத் திரும்பும் வகையில் செயல்பட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
இது குறித்து அலிகர் மாவட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் நிஷாத் சர்மா கூறுகையில், ''ஒரு நகர்ப்புற நக்சலைட்டாக இர்பான் ஹபீப் செயல்படுகிறார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் செய்த கலவரத்தையும் இவரே தூண்டியுள்ளார்.
இந்தியாவில் படையெடுத்த முகலாய மன்னர்களைப் புகழ்ந்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கினர் மற்றும் இந்துக்களை விமர்சிப்பதே ஹபீப் பணியாகி விட்டது. எனவே, அவரை தகைசால் பேராசிரியர் பதவியில் இருந்து அலிகர் பல்கலை நீக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதே சம்பவத்தை விவரமாகக் குறிப்பிட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நிஷாத் சர்மா கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியலமைப்புப் பதவியைத் தாங்கிய கேரள ஆளுநருக்கான மரபை அவமதித்த பேராசிரியர் இர்பான் ஹபீபை அலிகர் பல்கலைழகத்தினுள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர் இர்பான் ஹபீப் விளக்கம்
இதனிடையில், கேரளா சம்பவத்திற்கு பேராசிரியர் இர்பான் ஹபீப் விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர், மேடையில் அமர்ந்திருந்த தம் பேரவையின் உள்ளூர் செயலாளரிடம் ஆளுநர் பேச்சு தேவையற்றது எனக் கூறச் சென்றபோது தான் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், குடியுரிமைச் சட்டம் பற்றிப் பேச ஆளுநர் இங்கு அழைக்கப்படவில்லை எனவும், அதைப் பேசி நேரத்தை வீணாக்க பேரவையினர் விரும்பவில்லை என்றும் ஹபீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து 'தி இந்து'விடம் பேராசிரியர் ஹபீப் கூறும்போது, ''எங்கள் பேரவை நிகழ்ச்சிகளின் தனி சட்டதிட்டம் இருப்பதால் ஆளுநருக்கான மரபு (புரோட்டோகால்) இங்கு பொருந்தாது. அவர் தான் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் குடியுரிமைச் சட்டம் மீது பேசி தவறு செய்து விட்டார்.
அவரை வரலாற்றாளர்கள் இடையே பேச அழைத்தோமே தவிர அரசியல் மேடைக்கு அழைக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.
இருப்பினும், உ.பி.யின் இந்து மஹாசபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும் பேராசிரியர் இர்பான் ஹபீபைக் கண்டித்துள்ளன. இந்தப் பிரச்சினை வரலாற்றுப் பேரவை முடித்து இர்பான் ஹபீப், அலிகர் திரும்பும்போதும் மீண்டும் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் ஆரிப் விளக்கம்
முன்னதாக, ஆளுநர் ஆரிப் தனது உரைக்கான விளக்கத்தில் ஒரு ஆளுநராக அரசின் சட்டத்தை விளக்குவது தனது கடமை எனவும், அதைச் செய்ததற்கு பேரவையில் குறுக்கீடுகள் கிளம்பியதாகவும் செய்தித் தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT