Published : 30 Dec 2019 02:37 PM
Last Updated : 30 Dec 2019 02:37 PM
டெல்லியில் கடும்பனி மூட்டம் காரணமாக இன்று நண்பகல் 12.52 மணி வரை 530 விமானங்கள் தாமதமாகின. 20 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லியில் டிசம்பர் மாதம் பிறந்ததில் இருந்து குளிர் கடுமையாக இருந்து வருகிறது. குளிரோடு சேர்ந்து காற்றும், பனி மூட்டமும் நிலவுவதால், மக்கள் பகல் நேரத்தில் கூட நடமாடுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
அதிலும் காலை நேரத்தில் 150 மீட்டர் தொலைவுக்கு சாலையில் பனிமூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். கடந்த சில நாட்களாக டெல்லியில் வெப்பநிலை மிகவும் குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 1.7 டிகிரி செல்சியஸாக மிகக்குறைந்த அளவில் டெல்லியில் பதிவானது.
இந்நிலையில், இன்று காலையில் இருந்து டெல்லியில் கடும்பனியும், பனிமூட்டமும் காணப்பட்டதால், ரயில் போக்குவரத்து தடைபட்டது, ஏராளமன ரயில்கள் தாமதமாகி ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சாலையில் 150 மீட்டர் தொலைவுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில் சிரமம் இருந்ததால், வாகனப் போக்குவரத்தும் குறைந்தது. சாலையில் சென்ற வாகனங்களும் மஞ்சள் விளக்கை ஒளிரவிட்டுச் சென்றன.
டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுபாதையில் 50 மீட்டர் முதல் 175 மீட்டர் வரை பாதை சரியாகத் தெரியாததால், பல விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
இன்று நண்பகல் 12.52 மணி நிலவரப்படி 530 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அதாவது 320 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. 210 விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "வடமாநிலங்கள் முழுவதும் கடுமையான பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சூழலை ஆய்வு செய்து வருகிறோம். முக்கியமான தவல்களை உடனுக்குடன் பயணிகளுக்குத் தெரிவிக்கிறோம். பயணிகள் தங்களின் விமானம் புறப்படும் நேரம், வரும் நேரம் ஆகியவற்றை அவ்வப்போது சோதித்துக்கொள்ளவும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
விஸ்தாரா விமான நிறுவனம், டெல்லி- மும்பை, மும்பை-டெல்லி ஆகிய வழித்தடத்தில் செல்லும் இரு விமானங்களை ரத்து செய்தது. மேலும், கோஏர், ஸ்பைஸ்ஜெட், ஏர்ஏசியா ஆகிய விமான நிறுவனங்களும் பனிமூட்டம் காரணமாக, விமானங்கள் தாமதமாக வரும், புறப்படும் என்று அறிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT