Published : 30 Dec 2019 01:44 PM
Last Updated : 30 Dec 2019 01:44 PM
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் திடீர் அதிர்ச்சியாக முதல் முறையாக தேர்தலில் நின்று வென்ற ஆதித்யா தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு அளித்து தேவேந்திர பட்னாவிஸுடன் சேர்ந்து துணை முதல்வராகப் பதவி ஏற்ற என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கும் அமைச்சர் பதவியில் இடம் அளிக்கப்பட்டது. துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டாக இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன.
ஆனால், திடீரென என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆதவு அளித்ததையடுத்து, பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கப் போதுமான பலம் இல்லை எனத் தெரிந்தவுடன் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சிவசேனா தலைமையில் காங்கிரஸ், என்சிபி கூட்டணி அரசு அமைந்தது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். அவருடன் காங்கிரஸ், என்சிபி கட்சி சார்பில் பாலசாஹேப் தோரட், நிதின் ராவத், ஏக்நாத் ஷின்டே, சுபாஷ் தேசாய், ஜெயந்த் பாட்டீல், சாஹன் பூஜ்பால் ஆகியோர் மட்டுமே கேபினெட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போது அளிக்கப்படவில்லை.
ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பின், மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் இன்று எளிமையான முறையில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களுக்கு ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் மிகவும் வியப்புக்குரிய வகையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன், ஆதித்யா தாக்கரேவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக நேரடி அரசியல் களத்துக்குள் வந்த ஆதித்யா தாக்கரேவும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு அளித்து சிக்கலை ஏற்படுத்தி ஒதுங்கிய என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அசோக் சவான், விஜய் வெட்டிவார், வர்ஷா கெய்க்வாட், சுனில் கேதார், அமித் தேஷ்முக், அஸ்லாம் ஷேக் உள்ளிட்டோர் அமைச்சராகப் பொறுப்பேற்றனர்.
என்சிபி கட்சி சார்பில் திலிப் வால்ஸ் பாட்டீல், தனஞ்சயா முண்டே, அனில் தேஷ்முக், நவாப் மாலிக், பாலசாஹேக் பாட்டீல், ஜிதேந்திர தாவத் உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
சிவசேனா சார்பில் ஆதித்யா தாக்கரே, அனில் பிரனாப், உதய் சாமந்த், சஞ்சய் ரத்தோடு, குலாப்ராவ் பாட்டீல், சந்திபன் பும்ரே ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT