Published : 30 Dec 2019 12:01 PM
Last Updated : 30 Dec 2019 12:01 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்கள் எந்த சூழலில் ஆதரவு அளித்தார்கள் என்பதை, கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்தான் விளக்க வேண்டும் என்று ஜேடியு கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஜேடியு கட்சியின் துணைத் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஜேடியு கட்சி ஆதரவு அளித்தது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தீர்கள், ஆனால், நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளாரே என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்:
''உண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜேடியு கட்சியின் எம்.பி.க்கள் வாக்களிக்க நிதிஷ் குமார் எந்த சூழலில் முடிவு எடுத்தார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒவ்வொரு கட்டத்திலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்த்து வருகிறது. என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இரண்டுக்கும் ஜேடியு எதிரான நிலைப்பாடு கொண்டது. நாடாளுமன்ற நிலைக்குழு ஆவணத்தைச் சோதித்துப் பார்த்தால் முதன்முதலில் எதிர்ப்பு நோட்டீஸை நாங்கள்தான் அளித்திருப்போம்.
இதுபோல் எதிராக இருந்து கொண்டு ஏன் ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தார்கள் என்பதை நிதிஷ் குமார் விளக்க வேண்டும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாகுபாடு உடையது. ஆனால், என்ஆர்சியுடன் சிஏஏ இணைக்கப்படாதவரையில் கொடுமையானதாக மாறாது. சிஏஏ சட்டமும், என்ஆர்சியும் இணைக்கப்பட்டால் மக்கள் மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது மட்டுமின்றி, வகுப்பின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படுவார்கள். ஆதலால் என்ஆர்சி எப்போதும் செயல்பாட்டுக்கு வரக்கூடாது''.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்
பாஜகவுடன் ஜேடியு கூட்டணி தொடர்வது குறித்துக் கேட்டபோது பிரசாந்த் கிஷோர் கூறுகையில், "பாஜகவுக்கும், ஜேடியு கட்சிக்கும் பிஹாரில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. கூட்டணி சிறப்பாக இருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டப்பேரவைத் தேர்தல் என்பது வேறு. இரு தேர்தல்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. இப்போதுள்ள நிலையில் பாஜகவுடன் எந்தவிதமான உரசலும் இல்லை" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT