Published : 30 Dec 2019 06:44 AM
Last Updated : 30 Dec 2019 06:44 AM

ஜார்க்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன்: பதவியேற்பு விழாவில் ராகுல், மம்தா, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி சார்பில் முதல்வர் பதவிக்கு அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, ராஞ்சியில் உள்ள மொரஹாபதி மைதானத்தில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது. இவ்விழாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஹேமந்த் சோரன் (44) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். ஹேமந்த் சோரனுடன் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆலம்கிர் ஆலம், மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வர் ஓரான், ராஷ்ட்ரீய ஜனதாதள எம்எல்ஏ சத்யானந்த் போக்டா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஹேமந்த் சோரனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துக்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என உறுதியளிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘‘ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு ஜார்க்கண்டின் அமைதி மற்றும் வளத்துக்கான புதிய சகாப்தத்தை உருவாக்க பாடுபடும் என உறுதியாக நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்ப்பதற்கும் சமூக நீதியைப் பாதுகாப்பதற்கும் மதச்சார்பற்ற கட்சிகள் இடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அவசியம். ஜார்க்கண்ட்டில் புதிய அரசின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x