Published : 29 Dec 2019 07:51 PM
Last Updated : 29 Dec 2019 07:51 PM
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவில் நேற்று பயணம் செய்த இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 6 ஆயிரத்து300 அபராதமாக போக்குவரத்து போலீஸார் விதித்துள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்ஆர் தாராபூரி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார். லக்னோவில் தாராபூரியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சென்றார்.
ஆனால், லக்னோவில் உள்ள லோஹியா பாத் எனுமிடத்தில் பிரியங்கா காந்தி கார் வந்தபோது போலீஸார் மடக்கி அனுமதி மறுத்தனர். ஆனாலும் பிரியங்கா காந்தி தயங்காமல் காங்கிரஸ் செயலாளர் தீரஜ் குர்ஜாருடன் இருசக்கர வாகனத்தில் தாராபூரி இல்லத்துக்குச் சென்றார்.
இதனால் செய்வதறியாது திகைத்த லக்னோ போலீஸார், ஜீப்பில் பிரியங்கா காந்தியைப் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று பாலிடெக்னிஸ் சதுக்கம் எனுமிடத்தில் மடக்கிப் பிடித்த அங்குச் செல்ல அனுமதி மறுத்தனர்.
ஆனால், பிரியங்கா காந்த தனது தொண்டர்களுடன் 2.5 கிமீ தொலைவு நடந்தே சென்றார். அப்போது பிரியங்கா காந்தியைத் தடுக்க முயன்ற பெண் போலீஸார் அவரின் கழுத்தை பிடித்து தள்ளியும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியிடம் உ.பி போலீஸார் முரட்டுத்தனமாக நடந்ததற்குக் காங்கிரஸ் கட்சியினர் உ.பி. முழுவதும் போலீஸார் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் லக்னோவில் நேற்று காங்கிரஸ் செயலாளர் தீரஜ் குஜ்ஜாருடன் பிரியங்கா காந்தி இரு சக்கர வாகனத்தில் சென்றார். வாகன உரிமையாளர் தீரஜ்க்கு போக்குவரத்து போலீஸார் இன்று ரூ.6,300 அபராதம் விதித்துள்ளனர்.
லக்னோவில் பிரியங்கா காந்தியும், தீரஜ் குஜ்ஜாரும் தலையில் ஹெல்மெட் அணியால் வாகனம் இயக்கினர்.வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் அதை இருவரும் மீறியதால், உரிமையாளருக்கு இந்த அபராதம் விதிப்பதாகப் போக்குவரத்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT