Last Updated : 29 Dec, 2019 07:18 PM

 

Published : 29 Dec 2019 07:18 PM
Last Updated : 29 Dec 2019 07:18 PM

''விருதுக்குப் பிறகு நான் ஓய்வெடுக்க மாட்டேன்; இன்னும் நிறைய வேலைகள் உள்ளன'' - பால்கே விருது பெற்ற அமிதாப் பச்சன் ஏற்புரை

ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்ற சிறப்புவிழாவில் இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து தாதா சாகேப் பால்கே விருது பெரும் மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். | படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி

நான் முடிக்க இன்னும் நிறைய வேலைகள் உள்ளன, எதிர்காலத்தில் மேலும் பல பணிகளை செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக, தனது திரைத்துறை சாதனைக்காக குடியரசுத் தலைவரிடமிருந்து தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இந்தியாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இன்று தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை புதுடெல்லியில் விக்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பச்சன் முன்னதாக இந்த கவுரவத்தைப் பெறவிருந்தார், ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

எனினும் அன்றைய தின விழாவில் கலந்துகொண்ட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், குடியரசுத் தலைவர் வழங்கும் பிரத்யேகமான சிறப்பு விழாவில் பால்கே விருது வழங்கி அமிதாப் பச்சன் கவுரவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

அதன்படி, இன்று ராஷ்டிரபதி பவனில் அதற்கான சிறப்பு ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் 2018க்கான தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அமிதாப் பச்சனுக்கு வழங்கி கவுரவித்தார்.

தாதாசாகேப் பால்கே விருது ஒரு தங்கத்தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ .10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது.

விழாவில் அமிதாப்புடன் அவரது மனைவியும் மூத்த நடிகையும் எம்பியுமான ஜெயா பச்சன் மற்றும் மகன் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியரசுத் தலைவரிடமிருந்து பால்கே விருதை பெற்றுக்கொண்ட அமிதாப் பச்சன் தனது ஏற்புரையில் கூறியதாவது:

''இந்த விருது அறிவிக்கப்பட்டபோது, ​​என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. இது, பல வருடங்கள் வேலை செய்தபின் வீட்டில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கான அறிகுறி போல இருக்கிறதே என்று.

உண்மையில் நான் முடிக்க இன்னும் சில வேலைகள் உள்ளன, மேலும் சில வேலைகள் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடிய சில சாத்தியக்கூறுகள் வந்து கொண்டிருக்கின்றன. விருது ஊக்கத்திற்கானது, ஓய்வுபெறுவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்தவே இதைக் கூறுகிறேன்.

தாதாசாகேப் பால்கே விருதுக்கு என்னை தகுதியானவர் என்று கண்டறிந்ததற்காக இந்திய அரசு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கடவுள் கருணை காட்டியுள்ளார், எனது பெற்றோரின் ஆசீர்வாதங்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்துறையைச் சேர்ந்த சக நடிகர்களின் ஆதரவு ஆகியவை எனக்கு இருந்தன.

அதேநேரம் முக்கியமாக, இந்திய ரசிகர்களின் அன்பு மற்றும் அவர்கள் அளித்த தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நான் இங்கே நிற்க இதுவே காரணம். இந்த விருதை நான் மிகவும் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.''

இவ்வாறு அமிதாப் பச்சன் விருது ஏற்புரையின்போது தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x