Published : 29 Dec 2019 06:30 PM
Last Updated : 29 Dec 2019 06:30 PM
காதல் இன்றி வாழ்வது சாத்தியமா? இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினத்துக்கும் அதன் மொழியில் சாத்தியம் இல்லை. காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்... இப்படி யாரோ ஒருவரின் மீதான அன்புதான் நம் இலக்கை நோக்கி நம்மை நாள்தோறும் நகர்த்துகிறது.
காதலுக்கு வயது தடையா? அல்லது வயது வித்தியாசம் தடையா? உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும் என்பதைக் கேரளாவில் உள்ள இந்த வயதான தம்பதியினர் நிரூபித்துள்ளார்கள்.
கேரளாவில் திருச்சூரைச் சேர்ந்த 67-வயது கொஞ்சையன் , 66 வயது லட்சுமியம்மாள் இருவருக்கும் நேற்று முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்துள்ளது. 22 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது காதலை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்த லட்சுமியம்மாள் தனது நண்பரிடம் காதலைக் கூறி திருமணம் செய்துள்ளார்.
திருச்சூரில் அருகே உள்ள ராமவர்மாபுரம் அரசினர் முதியோர் இல்லத்தில்தான் வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இதில் லட்சுமி அம்மாளுக்கு கைகளில் மெகந்தி வைக்கும் சடங்குகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் சக்கை போடு போட்டு பரவி வருகின்றன.
இந்த திருமணம் நடந்ததே சுவாரஸ்யமான விஷயம்தான்.
திருச்சூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணய்யர் சுவாமி. இவரின் மனைவி லட்சுமி அம்மாள். மிகப்பெரிய சமையல் கலைஞரான கிருஷ்ணயரிடம் வேலை செய்தவர் அவரின் நண்பர் கொஞ்சையன். இவர் இரிஞ்சகுடா பகுதியைச் சேர்ந்தவர்.
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் கிருஷ்ணய்யர் இறந்துவிட்டார். அவர் இறக்கும் முன் தனது பால்ய நண்பர் கொஞ்சயனை அழைத்து தனது இறப்புக்குப்பின் மனைவி கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஆனால், கிருஷ்ணய்யர் மறைவுக்குப்பின் வீட்டில் தனியாக இருக்க மனமின்றி, லட்சுமி அம்மாள் திருச்சூர் அருகே ராமவர்மா புரத்தில் இருக்கும் அரசு முதியோர் காப்பகத்தில் தங்கிவிட்டார். கொஞ்சையனும் சமையல் வேலைக்குச் சென்றுவிட்டு அவ்வப்போது வந்து லட்சுமி அம்மாளைச் சந்தித்துள்ளார். அப்போது லட்சுமி அம்மாளிடம் கொஞ்சையன் காதலைத் தெரிவித்தபோது அதை மறுத்துவிட்டார்.
காலம் உருண்டோட லட்சுமி அம்மாளுக்கும், காதல் மலர்ந்துள்ளது. ஆனால் லட்சுமி அம்மாள் காதலைச் சொல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சமீபத்தில் கொஞ்சயனைக்கு பக்கவாதம் வந்து குருவாயூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொஞ்சயனை வயநாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளது. அப்போது கொஞ்சயனிடம் வாழ்க்கை குறித்துக் கேட்டபோது, லட்சுமி அம்மாள் குறித்துத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கேரள சமூக நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் லட்சுமி அம்மாள் இருக்கும் முதியோர் காப்பகத்திலேயே கொஞ்சையனும் சேர்க்கப்பட்டார்.
அங்குத் தீவிர சிகிச்சை, லட்சுமி அம்மாள் கவனிப்பு ஆகியவற்றால் கொஞ்சையன் உடல் நலன் தேறி நடக்கத் தொடங்கினார். அப்போது லட்சுமி அம்மாளும் தன்னுடைய காதலைத் தெரிவித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் விருப்பம் தெரிவித்து முதியோர் இல்ல அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கை எடுத்து இருவருக்கும் முறைப்படி நேற்று திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்தின் முதல்நாள் லட்சுமி அம்மாளுக்கு மெகந்தி வைக்கும் சடங்கு தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. திருமணத்துக்கு முதியோர் இல்லத்தில் உள்ளவர்களும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், அதிகாரிகளும் வந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் குமார் கூறுகையில்," இருவருமே கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வேறு நபர்களைத் திருமணம் செய்து துணையை இழந்தவர்கள்.இருவருக்குமே குழந்தை இல்லை. மீண்டும் காலம் இருவரையும் முதியோர் இல்லம் மூலம் சேர்த்து வைத்துள்ளது.
கொஞ்சையன் உடல் நலக்குறைவால், இந்த முதியோர் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டபோது அவரை லட்சுமி அம்மாள் கவனித்துக்கொண்டார். கொஞ்சையன் உடல்நலன் குணமானபின், இருவரும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். சமூக நீதித்துறை அமைச்சகத்தின் விதிப்படி, முதியோர் இல்லத்தில் தங்கி இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால், அதற்கு சில விதிமுறைகள் உண்டு அதன்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் தொடர்ந்து இந்த முதியோர் இல்லத்திலேயே வாழ்வதில் தடையில்லை" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT