Published : 29 Dec 2019 09:08 AM
Last Updated : 29 Dec 2019 09:08 AM
சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளுக்கு இழப்பீடாக, உத்தரபிரதேசத்தின் புலந்த்சாஹர் மாவட்ட மக்கள் ரூ. 6.27 லட்சத்தை வழங்கியுள்ளனர். அரசிடமிருந்து எந்தவொரு நோட்டீஸும் பிறப்பிக்கப்படாத சூழலில், அப்பகுதி மக்களே முன்வந்து இந்த இழப்பீட்டை வழங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின்போது, பல இடங்களில் கலவரங்களும், வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. இதில் பேருந்துகள், ரயில்கள் என ஏராளமான பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இதனால், உத்தரபிரதேச அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடமே அதற்கான இழப்பீட்டை பெற அம்மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, வன்முறை சம்பவங்களில் சேதப்படுத்தப்பட்ட சொத்துகளின் மதிப்பினை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கணக்கிட்டு வருகின்றன. மேலும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உத்தபிரதேசத்தின் புலந்த்சாஹர் மாவட்ட மக்கள் சார்பில் அங்கு சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கு இழப்பீடாக ரூ.6.27 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் யாருக்கும் இதுவரை நோட்டீஸ் அனுப்பாத சூழ்நிலையில், அப்பகுதி மக்களே முன்வந்து இந்த இழப்பீட்டு தொகையை வழங்கியிருக்கின்றனர்.
1,000 மாணவர்கள் மீது வழக்கு
இதனிடையே, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது சிறப்பு அதிரடி படை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT