Published : 28 Dec 2019 11:42 AM
Last Updated : 28 Dec 2019 11:42 AM
டெல்லியில் இந்த ஆண்டு சீசனில் மிகவும் குறைந்தபட்சமாக 1.7 டிகிரி வெப்பநிலை இன்றுகாலை பதிவானது. கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகளும் பாதை தெரியாமல் பெரும் சிரமப்பட்டனர்.
வானில் அடர்த்தியான பனி மூட்டம் இருந்ததால் விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டது.
இந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லி சப்தர்ஜங்கில் உள்ள வானிலை மையம் அளித்த அறிக்கையின்படி, இன்று டெல்லியில் குறைந்தபட்சமாக லோதி சாலையில் 1.7 செல்சியஸ் பதிவானது. அதற்கு அடுத்தாற்போல் அயா நகரில் 1.9 டிகிரி செல்சியஸும், பாலம் பகுதியில் 3.1 டிகிரியும், சப்தர்ஜங் பகுதியில் 2.4 டிகிரி செல்சியஸும் பதிவானது.
கடுமையான பனி மூட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் எதிரில் வரும் வாகனம் தெரியவில்லை. ஏறக்குறைய 150மீட்டர் வரை வாகனங்கள் தெளிவாகத் தெரியாததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து தடைபட்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
கடும் பனிமூட்டம், குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் பெரும்பாலும் சாலையில் நடமாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இதனால், டெல்லி-என்சிஆர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
கடந்த 1901-ம் ஆண்டுக்குப்பின் டெல்லியில் 2-வது மிகக் குறைந்தபட்சமாக வெப்பநிலை இன்று பதிவானது. இதற்கு முன் 2013-ம் ஆண்டில் டிசம்பர் 30ம் தேதி 2.4 டிகிரியும், 1996, டிசம்பர் 11-ம் தேதி 2.3 டிகிரியும் பதிவானது. ஆனால் கடந்த 1930-ம் ஆண்டு டிசம்பர் 27-ம்தேதிதான் எப்போதும் இல்லாத வகையில் ஜீரோ டிகிரி வெப்பநிலை இருந்தது.
20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகக் கடந்த 1919, 1929, 1997 மற்றும் 1961-ம் ஆண்டுகளில் பதிவானது என்று வானிலை மையம் தெரிவிக்கிறது.
டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து தொடர்ந்து 13 நாட்களாக கடும் குளிர்நாட்கள், அதாவது குளிர்ந்த காற்று வீசி வருகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை வியாழக்கிழமை 19.85 டிகிரி செல்சியஸ் இருந்தநிலையில், வரும் 31-ம் தேதிக்குள் 19.15 டிகிரி செல்சியஸுக்கும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை வரை கடும் குளிர் இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT