Published : 28 Dec 2019 11:02 AM
Last Updated : 28 Dec 2019 11:02 AM

வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கதறுவார்கள்: யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் 2  ட்வீட்கள்

லக்னோ

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக உ.பி.யில் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கை‘ஒவ்வொரு போராட்டக்காரருக்கும் கொடுத்த அதிர்ச்சி’ என்ற தொனியில் உ.பி. முதல்வர் அலுவலக ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி. அரசு நடவடிக்கைகளுக்கு 21 பேர் பலியாக, சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடந்த மோதலில் இருதரப்பினரிலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் நிச்சயம் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஏற்கெனவே எச்சரித்திருந்தார். பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தோருக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களிடம் சேத இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

முதல்வரின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களைக் கிளப்ப விமர்சனங்களுக்கு எதிர்வினையாக உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் தன் ட்விட்டரில்,

“ஒவ்வொரு கலவரக்காரரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒவ்வொரு போராட்டக்காரரும் கலங்கிப் போயுள்ளனர். யோகி ஆதித்யநாத் அரசின் கடும் நடவடிக்கைகள் அனைவரையும் மவுனப்படுத்தியுள்ளது, பொதுச்சொத்தைச் சேதம் செய்வோர் அதற்கான இழப்பீட்டை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார், வன்முறையில் ஈடுபட்டோர் இப்போது கதறுவார்கள், காரணம் உ.பி.யில் நடப்பது யோகியின் ஆட்சி” என்று தெரிவித்துள்ளது.

இன்னொரு முதல்வர் அலுவலக ட்வீட்டில் "யோகி ஆதித்யநாத்தின் சக்தி வாய்ந்த இந்த அரசைப் பார்த்து ஒவ்வொரு ஆர்ப்பாட்டாக்காரரும் யோகியின் அதிகாரத்திற்கு சவால் ஏற்படுத்தி தவறு செய்து விட்டோம் என்பதை இப்போது உணர்வார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

கடும் விமர்சனங்களைத் தாண்டியும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தோரின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை இன்னும் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக இதுவரை 372 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x