Published : 28 Dec 2019 09:24 AM
Last Updated : 28 Dec 2019 09:24 AM
"மகாராஷ்டிர அமைச்சரவையில் என்னை சேர்ப்பது பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்யும்’’ என்று அஜித் பவார் நேற்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து, ‘மகாராஷ்டிர விகாஸ் அகாடி’ என்ற கூட்டணி அரசை அமைத்துள்ளன. இந்நிலையில், நாளை மறுதினம் 30-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது. அதில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், புனேவில் உள்ள பலேவாடி விளையாட்டு அரங்கத்தில் நேற்று விளையாட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அஜித் பவார் தொடங்கி வைத்தார். பின்னர் பத்திரிகையாளரிடம் அஜித் பவார் பேசுகையில், “அமைச்சரவையில் நான் இடம்பெறுவது குறித்து என்னுடைய கட்சி தலைமை முடிவு எடுக்கும்’’ என்று தெரிவித்தார்.
முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகி பாஜக.வுடன் அஜித் பவார் கூட்டணி அமைத்தார். அதன் அடிப்படையில், கடந்த நவம்பர் மாதம் பாஜக தலைமையில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆனால், பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எனவே இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT