Last Updated : 28 Dec, 2019 09:07 AM

8  

Published : 28 Dec 2019 09:07 AM
Last Updated : 28 Dec 2019 09:07 AM

ஜம்மு காஷ்மீர் மக்கள் யூனியன் பிரதேச அந்தஸ்தை வரவேற்கிறார்கள்: ராம் மாதவ் கருத்து

பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் : கோப்புப்படம்

ஜம்மு

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு ஆக்கியதை அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள், அரசியலமைப்பு 370 பிரிவு ரத்து செய்தபின் புதிய யூனியன் பிரதேசத்தில் அமைதி நிலவுகிறது என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார்

ஜம்முவில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்டதை அங்குள்ள மக்கள் வரவேற்கிறார்கள். நான் ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் பலர் பிரமுகர்களையும், இளைஞர்களையும், உள்ளூர் மக்களையும் சந்தித்தேன். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கும் என்று நம்புகின்றனர்.
அரசியலமைப்பு 370 பிரிவு ரத்து செய்யப்பட்டபின் இங்கு அமைதி நிலவுகிறது.

கடந்த 5 மாதங்களாக எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. வழக்கமாக வெள்ளிக்கிழமையன்று கல் எறிதல் சம்பவங்கள் இருக்கும், ஆனால் இப்போது அந்த சம்பவங்களும் நடப்பதில்லை.

ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை போலீஸார் சிறப்பாகப் பராமரித்து வருகின்றனர். அமைதிக்காகக் கட்டுக்கோப்பாக வாழ்ந்துவரும் மக்களுக்குத்தான் அனைத்து பெருமைகளும் சாரும்

ஜம்மு-காஷ்மீரில் 32 முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட மொத்தமே 100-க்கும் குறைவானவர்கள் மட்டுமே தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் அவர்களும் படிப்படியாக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

ஜம்மு-காஷ்மீரின் நிலைமை விரைவில் மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பின், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க பாஜக ஆதரவளிக்கும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி உள்ளூர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்துறை அமைச்சகத்தால் குழு அமைக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களின் எல்லைகள் வரையறைப்படுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போது லடாக் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட கார்கில் மற்றும் லே பகுதியில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு விட்டது. விரைவில் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களிலும் இச்சேவை அளிக்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களில் அரசியல் மற்றும் மத ரீதியிலான சதி உள்ளது. இந்தச் செயலை மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சிகள் மற்றும் மதவாத சக்திகளை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

இவர்கள் பரப்பி வரும் வதந்திகளால்தான் தற்போது நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிதான் வன்முறையைத் தூண்டி வருகிறது. பாஜகவை அரசியல்ரீதியாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, அரசுத்துறைகள் மீது குறிப்பாக காவல்துறையினர் மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது

இவ்வாறு ராம் மாதம் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x