Last Updated : 27 Dec, 2019 03:16 PM

1  

Published : 27 Dec 2019 03:16 PM
Last Updated : 27 Dec 2019 03:16 PM

ஏழைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு போன்றது என்ஆர்சி, என்பிஆர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராய்ப்பூர் விமானநிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் |ஏஎன்ஐ

ராய்பூர்

ஏழைகள் மீது தாக்குல் நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையோடு போன்றது தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு(என்பிஆர்) என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சார்பில் தேசிய பழங்குடியினர் நடன விழா இன்று தொடங்கியது. இந்த விழாவைக் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து விமானநிலையத்தில் நிருபர்களுக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

என்ஆர்சி அல்லது என்பிஆர் இதில் எதுவாக இருந்தாலும், நாட்டின் ஏழைமக்கள் மீது விதிக்கப்படும் வரிபோன்றதுதான். பணமதிப்பிழப்பைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஏழை மக்கள் மீது விதிக்கப்பட்ட வரியாகும். வங்கிக்குச் சென்று பணத்தை டெபாசிட் செய்த மக்கள், அந்த பணத்தை வங்கிக்கணக்கில் இருந்து எடுக்க முடியவில்லை. ஒட்டுமொத்த பணமும் 15 முதல் 20 பேரின் பாக்கெட்டுக்குள் சென்றது, பணமதிப்பிழப்பு போன்றதுதான் என்ஆர்சியும், என்பிஆர்.

ஏழை மக்கள் அரசு அலுவலகத்துக்குச் சென்று, தங்கள் சான்றிதழ்களை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும், அதில் சிறிய தவறு இருந்தாலும், லஞ்சம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, 15 முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும். இதுதான் உண்மை, இது மக்கள் மீதான தாக்குதல்

பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியில் இருந்து தற்போது 4.5 சதவீதத்துக்கு குறைந்துவிட்ட நிலையில், எவ்வாறு ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதியமுறையில் வளர்ச்சியைக் கணக்கிடும் முறையிலேயே 4.5 சதவீதம் வளர்ச்சிதான்.

இதுவே பழைய முறையில் வளர்ச்சியைக் கணக்கிட்டால் பொருளாதார வளர்ச்சி 2.50 சதவீதத்துக்கு மேல் தாண்டாது. இந்தியாவில் வன்முறை நிலவுகிறது என்றுஉலக நாடுகளில் பேசப்படுகிறது. பெண்கள் சாலைகளில் சுதந்திரமாக நடக்க முடியவில்லை, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடியால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என்றும், எப்படி நடந்தது என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

முதலில் பிரதமர் பதவியைக் கேலிக்கூத்தாக்கினார், இப்போது தனது பதவிக்குரிய பொறுப்புகளைச் செய்ய முடியாமல் இருக்கிறார். தேசத்தின் காலம் வீணாகிறது.

ஏழைமக்கள், விவசாயிகள் ஆகியோரின் பணம் 15 முக்கிய நபர்களிடம் சென்று சேர்ந்தது, மக்களின் வாங்கும் சக்தி குறைந்து யாரும் வாங்க முன்வராததால், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இது எளிய பொருளாதாரம், இதைப் பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியவில்லை

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x