Published : 27 Dec 2019 02:14 PM
Last Updated : 27 Dec 2019 02:14 PM
ரயில்வே துறையின் வரலாற்றில் 2019-ம் ஆண்டு பாதுகாப்பான ஆண்டாகவும், சாதனை படைக்கும் ஆண்டாகவும் அமைந்துள்ளது. ரயில் விபத்துக்கள் மூலம் எந்த பயணியும் உயிரிழப்பைச் சந்திக்கவில்லை என்பது ரயில்வே துறைக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
ரயில்வே துறையில் பணியாற்றிய ஊழியர்கள் இறப்பு கடந்த ஆண்டு இருந்த நிலையில் கடந்த 12 மாதங்களாக ரயில் விபத்தின் மூலம் எந்தப் பயணியும் உயிரிழக்கவில்லை என்று ரயில்வே துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018-19-ம் ஆண்டில் ரயில்வே துறையில் 16 உயிரிழப்புகளும், 2017-18-ம் ஆண்டில் 28 உயிரிழப்புகளும், 2016-2017-ம் ஆண்டில் 195 உயிரிழப்புகளும் நேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 1990- முதல் 1995-ம் ஆண்டுவரை சராசரியாக ரயில்வே துறையில் ஆண்டுக்கு 500 விபத்துக்கள் நடந்து வந்தன. இதன் மூலம் கடந்த ஆண்டுகளில் 2,400 பயணிகள் உயிரிழந்தனர், 4,300 பயணிகள் காயமடைந்தனர்.
அதன்பின் 2013 முதல் 2018-ம் ஆண்டுகள் வரையில் 110 ரயில் விபத்துகள் ஆண்டுதோறும் நடந்த நிலையில், அதில் 990 பயணிகள் உயிரிழந்தனர், 1,500 பயணிகள் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
பெரும்பாலும் ரயில்வே விபத்துகள் ரயில்கள் மோதல், தடம்புரளுதல், தீப்பிடித்தல், ஆளில்லா கேட்டில் விபத்தில் சிக்குதல் உள்ளிட்டவை மூலம் நடக்கின்றன. ரயில்வே விபத்துக்களைக் கணக்கிடும்போது எத்தனை பேர் உயிரிழப்பைச் சந்தித்தார்கள் என்று கணக்கிடப்படுகிறது. அதிலும் உட்பிரிவாக எத்தனை ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள், பணியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன
ரயில்வே துறையைப் பொறுத்தவரை ரயில் விபத்துக்களை படிப்படியாகக் குறைத்துள்ளது.கடந்த 2017-18-ம் ஆண்டில் முதல்முறையாக ரயில் விபத்துக்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்துக்கு வந்தது. அதாவது 2017-18-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 73விபத்துக்களும், அதன்பின் 2018 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 45 விபத்துக்களும் பதிவாகின.
ஆனால், 2014-15-ம் ஆண்டில் ஆளில்லா லெவல் கிராஸிங் மூலம் 50 விபத்துக்கள் நடந்தன. இது 2015-16-ம் ஆண்டில் 20 ஆகவும், 2016-17-ம் ஆண்டில் 10 விபத்துக்களாகவும், 2017-18-ம் ஆண்டில் 3 விபத்துக்களாகவும் குறைந்தது. 2018-19-ம் ஆண்டில் 3 விபத்துக்களாகவும், 2019-20-ம் ஆண்டில் எந்தவிபத்துக்களும் இதுவரை பதிவாகவில்லை.
ரயில் விபத்துக்கள் மூலம் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்துள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டில் பல்வேறு ரயில் விபத்துக்கள் மூலம் 17 ஆயிரத்து 365 பேர் காயமடைந்தனர்.
குறிப்பாக அஜ்மீர்-சால்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் 15 பெட்டிகள் தடம்புரண்டு 44 பேர் காயமடைந்தனர், ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 68 பயணிகள் காயமடைந்தனர்.
2017-18-ம் ஆண்டில் 195 பயணிகள் காயமடைந்தனர். இதில் மிகப்பெரிய அளவில் உ.பியில் உள்ள கடாவுளி நகரில் நடந்த விபத்தில் 97 பயணிகள் காயமடைந்தனர். கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 23 பேர் உயிரிழந்தனர். 2018,2019-ம் ஆண்டில் மொத்தம் 106 பயணிகள் காயமடைந்தனர்
இந்த காலகட்டத்தில் அமிர்த்சர் நகரில் தசரா பண்டிகையை ரயில்வே இருப்புப்பாதையில் நின்று பார்த்த மக்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இதில் 59 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், இந்த விபத்து ரயில்வேயின் விபத்தில் கணக்கில் கொண்டுவரப்படாது, ஏனென்றால், ரயில்வே பாதையை ஆக்கிரமித்து பார்வையாளர்கள் நின்றவர்கள் மீது ரயில்வே மோதியதால் இதை ரயில்வே விபத்தில் சேர்க்கவில்லை.
2019-20-ம்ஆண்டில் ரயில்வேயில் எந்தவிதமான விபத்துக்களும் பயணிகள் ரயிலில் நடக்கவில்லை. ஆனால், சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்துக்கள் நடந்துள்ளன என்றாலும் உயிரிழப்பு இல்லை. கடந்த 12 மாதங்களில் ரயில்வே விபத்து மூலம் இதுவரை 33 பயணிகள் மட்டுமே காயமடைந்துள்ளனர், ரயில்வே ஊழியர்கள் சிலர் விபத்தில் இறந்தாலும் பயணிகள் கணக்கில் எந்த உயிரிழப்பும் இல்லை.
இந்த ஆண்டில் சில ரயில் விபத்துக்களும் நடந்தன. அதாவது, சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 பெட்டிகள் தடம்புரண்டன, சாப்ரா-சூரத் தாப்தி கங்கா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது, ஹைதராபாத்-புதுடெல்லி ரயிலில் தீவிபத்து, தெலங்காவில் இரு ரயில்கள் மோதிக்கொண்டது என விபத்துக்கள் நேர்ந்தபோதிலும் உயிரிழப்புகள் இல்லை,பயணிகளுக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டது.
இதுகுறித்து ரயில்வே துறை சார்பில் கூறுகையில், " 2019-ம் ஆண்டில் பல்வேறு முயற்சிகள், திட்டமிடல்கள், நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக, பயணிகள் உயிரிழப்பின்றி பாதுகாப்பான ஆண்டாக ரயில்வேக்கு மாறியுள்ளது. மிகப்பெரிய அளவில் பராமரிப்பு பணிகள், நவீன எந்திரங்களுடன் பராமரிப்பு, ஆள் இல்லா லெவல் கிராஸிங் குறைப்பு, ஐசிஎப் பெட்டிகளை நீக்கி, எடைகுறைந்த எல்ஹெச்பி பெட்டிகள் கொண்டுவரப்பட்டது, சிக்னல் முறையில் நவீனம், அதிகமான கண்காணிப்பு பணியாளர்கள் போன்றவற்றால் விபத்துக்களும் குறைந்தன, உயிரிழப்புகளும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT