Published : 27 Dec 2019 11:48 AM
Last Updated : 27 Dec 2019 11:48 AM
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப்படையினரும், போலீஸாரும் கூடுதலாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பெரும்பாலான மாநிலங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது, தீவைத்துக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக உ.பி. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், தொழுகை முடிந்து முஸ்லிம்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, 21 மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்பை உ.பி. அரசு ரத்து செய்துள்ளது
புதன்கிழமை வரை 9 மாவட்டங்களில் மட்டும் இன்டர்நெட் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இருந்தநிலையில், 21 மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்பை ரத்து செய்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி லக்னோ, ஹபூர்,காஜியாபாத், புலந்த்சாஹர், மீரட், கான்பூர், பெரோசாபாத், பேரெய்லி, சஹாரான்பூர், பிஜ்னோர், ராம்பூர், அம்ரோஹா,முசாபர்நகர், சம்பல், ஷாம்லி, வாரணாசி, ஆசம்கார்க், மொராதாபாத், ஆக்ரா, அலிகார்க் ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது
தவறான தகவல்கள், வதந்திகள் பரப்பக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸார்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பி.வி.ராமசாஸ்திரி கூறுகையில், " மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களிடமும் போலீஸ் உயரதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். இன்டர்நெட் இணைப்பும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது, சமூகஊடங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்
பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த மனவ் அக்னி கோத்ரி எனும் மாணவர் கூறுகையில்" இன்டர்நெட் இணைப்பை நம்பித்தான் படித்து வருகிறோம். திடீரென்று ரத்து செய்தால் எவ்வாறு படிப்பது, தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக முடியும்"எனத் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சத்தர்பால் சிங் கூறுகையில், " ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கும் இன்டர்நெட் இணைப்பை நம்பி்த்தான் இருக்கிறதா. அப்படியென்றால் நிரந்தரமாக இன்டர்நெட் இணைப்பை ரத்து செய்யலாமே,. இன்று டிஜிட்டல் உலகத்தில் வாழ்கிறோம். ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒருமுறை இன்டர்நெட் இணைப்பை ரத்து செய்தால், எவ்வாறு வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் பேசுவது, புத்தாண்டு தொடங்குவதையடுத்து, வெளியூர்களுக்குச் செல்ல எவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்வது. ஆன்-லைனில் பொருட்கள் வாங்க முடியுமா, டிக்கெட்டை ரத்து செய்ய முடியுமா அனைத்தையும் இன்டர்நெட் மூலம் நடக்கும் போது ரத்து செய்வது வேதனையாக இருக்கிறது " எனத் தெரிவித்தார்
இதற்கிடையே கோரக்பூர், ராம்பூர் உள்ளிட்ட பதற்றமான மாவட்டங்களில் வன்முறை நிகழாமல் இருக்கத் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT