Published : 27 Dec 2019 07:11 AM
Last Updated : 27 Dec 2019 07:11 AM
குஜராத், ராஜஸ்தானில் வெட்டுக்கிளி படையெடுப்பால் பல ஆயிரம்ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன.வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் 11 குழுக்கள் குஜராத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி ரசிகர்களை பதற வைக்கும். இதேபோல குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் வயல்கள், தோட்டங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழித்து வருகின்றன.
ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக பறந்து வந்து பயிர்களை நாசப்படுத்துவது வழக்கம். இந்த வெட்டுக் கிளிகள் ஆப்பிரிக்காவில் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன.
அவை நாளொன்றுக்கு 150 முதல் 200 கி.மீ. வரை பறக்கின்றன. ஆப்பிரிக்காவில் இருந்துஏமன், ஈரான், பாகிஸ்தான் வழியாகஇந்திய எல்லைக்குள் நுழைகின்றன. வரும் வழியெல்லாம் இனப்பெருக்கம் செய்கின்றன. பயிர்களைநாசம் செய்கின்றன. மக்களுக்கு இடையூறு செய்கின்றன.
தற்போது பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை சூறையாடி வருகின்றன. குஜராத்தின் வடக்கு மாவட்டங்களான பனாஸ்கந்தா, பதான், கட்ச் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், ஆமணக்கு, காட்டாமணக்கு, உருளைக்கிழங்கு, பருத்தி, கோதுமை பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்துள்ளன. இதேபோல ராஜஸ்தானின் 9 மாவட்டங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வடமாநில விவசாயிகள் கூறும்போது, “வழக்கமாக அக்டோபர் மாதத்துடன் வெட்டுக் கிளி தொல்லை ஒழிந்துவிடும். ஆனால் இப்போது டிசம்பர் மாதம் வரை வெட்டுக்கிளி பிரச்சினை நீடிக்கிறது. பாகிஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் இருந்துஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பறந்து வருகின்றன.
அப்போது வானமே இருண்டு விடுகிறது. கடந்த 1994-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மத்திய வேளாண் துறை சார்பில்குஜராத்துக்கு 11 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆய்வு நடத்தி வருகின்றன.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறும்போது, “ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்து வெட்டுக்கிளிகளை அழிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
சர்வதேச உயிரியல் ஆய்வாளர்கள் கூறும்போது, “ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் சுமார் 23 நாடுகளில் வெட்டுக்கிளி பிரச்சினை உள்ளன. முதல்முறையாக இத்தாலியிலும் வெட்டுக்கிளி பிரச்சினை தலையெடுத்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச நாடுகள் ஆய்வு செய்வது அவசியம்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT