Published : 25 Dec 2019 08:24 AM
Last Updated : 25 Dec 2019 08:24 AM

மத்திய அரசு அதிகாரிகளின் செயல்திறன் பற்றி தர நிர்ணயம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி

மத்திய அரசு அதிகாரிகளின் பணியின் செயல்திறன் குறித்து தர நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ராணுவ அமைச்சகத்தின் நிதிப்பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

எந்த ஒரு குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நிறுவனத்துக்கும் அல்லது நாட்டுக்கும் நிதி என்பது முதுகெலும்பாக உள்ளது. ஒவ்வொரு அமைச்சகமும் சிறப்பாக செயல்பட நிதி முக்கியம். அவற்றை நிர்வகிப்பதிலும் திறமையும் நேர்மையும் முக்கியமானது. இதற்காக பொது நிதி நிர்வாக அமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்திவருகிறது.

அரசின் நோக்கம்

நிதி நிர்வாகம் சிறப்பாக செயல்படவும் நேர்மையுடன் வெளிப்படையாக இருக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு அதிகாரிகளின் பணியின் செயல்திறன் குறித்து தர நிர்ணயம் செய்யப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குறைந்தபட்ச அரசு நடைமுறை, அதிகபட்ச நிர்வாகத் திறன் என்ற அரசின் நோக்கத்தின் கீழ் அதிகாரிகளின் செயல்திறன் பற்றி தர நிர்ணயம் செய்யப்படும். நிர்வாக நடைமுறைகள் விரைவில் செயல்பட வேண்டும் என்பதும் அதன் மூலம் மக்களுக்கு விரைவில் பலன் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.

இவ்வாறு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x