Published : 24 Dec 2019 03:30 PM
Last Updated : 24 Dec 2019 03:30 PM
மகாராஷ்டிராவில் எந்தவிதமான தடுப்புக் காவல் முகாமும் இல்லை என்பதால், முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்தார்.
டெல்லியில் கடந்த ஞாயிறன்று நடந்த பேரணியின்போது பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியும், நகர்ப்புற நக்சல்களும் சேர்ந்து, முஸ்லிம்கள் தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தவறான தகவலைப் பரப்புகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டமோ அல்லது என்ஆர்சியோ இந்திய முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் தீங்கு விளைவிக்காது, கவலைப்படத் தேவையில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நவி மும்பையில் தடுப்பு முகாம் அமைப்பதற்காக நிலம் கோரப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இந்தியாவில் விசா முடிந்த காலத்துக்குப் பின்பும் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள் இங்கு தங்கவைக்கப்பட உள்ளனர். இதைத் தடுப்பு முகாம்கள் என்று அழைக்கக் கூடாது" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் உள்ள முஸ்லிம் எம்எல்ஏக்கள் குழு நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்துப் பேசினர். என்சிபி எம்எல்ஏ நவாப் மாலிக் தலைமையில் வந்த எம்எல்ஏக்கள் குழு, சிஏஏ சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்த தங்கள் அச்சத்தையும், தடுப்பு முகாம்கள் குறித்தும் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர்.
அதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மகாராஷ்டிராவில் எந்தவிதமான தடுப்புக் காவல் முகாமும் உருவாக்கப்படாது. முஸ்லிம்கள் எந்த சூழலிலும் அச்சப்படத் தேவையில்லை. என்னைச் சந்திக்க வந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள் குழுவிடம், முஸ்லிம்களுக்கு இந்த மாநிலத்தில் எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று நான் உறுதி அளித்துள்ளேன்.
நவி மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் தடுப்பு முகாம் அமைக்கப்படுவது குறித்து என்னிடம் எம்எல்ஏக்கள் கவலை தெரிவித்தார்கள். உண்மையில் அந்த முகாம் என்பது, போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்களை வைப்பதற்காக அமைக்கப்படுகிறது.
தற்போது 38 வெளிநாட்டவர்கள் சிறையில் உள்ளார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் சொந்த நாட்டுக்குச் செல்லும் வரை இந்த தடுப்புக் காவல் முகாமில்தான் தங்க வைக்கப்படுவார்கள்.
ஆதலால் மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களின், சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உரிமையும் பறிக்கப்பட என்னுடைய அரசு அனுமதிக்காது. ஆதலால், மக்கள் மாநிலத்தில் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT