Published : 24 Dec 2019 01:44 PM
Last Updated : 24 Dec 2019 01:44 PM
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகியவை குறித்த சந்தேகங்களை மத்திய அரசு தீர்க்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடந்த போராட்டத்தில் 20பேர் வரை உயிரிழந்துள்ளனர்
காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று பேசி வருகின்றனர். ஆனால், மத்திய அரசோ குடியுரிமைச் திருத்தச் சட்டமும், என்ஆர்சியும் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசுக்குப் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், " குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும், என்ஆர்சி ஆகியவற்றில் இருக்கும் அனைத்து சந்தேகங்கள், கவலைகளைக் குறிப்பாக முஸ்லிம் மக்களின் கவலைகளைப் போக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பகுஜன் சமாஜ் கோரிக்கை விடுக்கிறது. மக்கள் அனைவரும் மனநிறைவு அடைந்தால், அதுதான் சிறப்பானதாக இருக்கும்
அதேசமயம் முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதிலும் முஸ்லிம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில கான்பூரில் நடந்த போராட்டம், வன்முறை தொடர்பாக 21ஆயிரத்து 500 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT