Published : 23 Dec 2019 10:00 PM
Last Updated : 23 Dec 2019 10:00 PM
கடந்த 24 ஆண்டுகளாகத் தோல்வியடையாமல் இருந்து வந்த பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான ரகுபர் தாஸ் தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
ஆளுநர் திரௌபதி முர்முவை அவரின் இல்லத்தில் இன்று மாலை சந்தித்து ரகுபர் தாஸ் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க உள்ளது. அங்கு முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.
இந்தத் தேர்தலில் ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் முதல்வர் ரகுபர் தாஸ் போட்டியிட்டார். பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரான சரயு ராயுக்கு இந்த முறை பாஜக சீட் வழங்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த சரயு ராய் கட்சியில் இருந்து விலகி, சுயேச்சையாக, ரகுபர் தாஸுக்கு எதிராகப் போட்டியிட்டார்.
கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் வென்று வரும் ரகுபர் தாஸ் இந்த முறையும் வென்றுவிடுவோம் என்று நினைத்திருந்தார். ஆனால், சரயு ராய் கடுமையான போட்டியளித்தார். தொடக்கத்தில் முன்னிலையில் சென்ற ரகுபர் தாஸ் நேரம் செல்லச் செல்ல பின்தங்கினார்.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, சுயேச்சை வேட்பாளர் சரயு ராயைக் காட்டிலும் 15 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி தோல்வியில் விழுந்துள்ளார் ரகுபர் தாஸ். சரயு ராய் 73,322 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ரகுபர் தாஸ் 57,607 வாக்குகளுடன் உள்ளார்.
ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதி மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியாகவும், விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகவும் இருந்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை இருந்த முதல்வர்கள் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்தான். பாபுலால் மாரண்டி, சிபுசோரன், அர்ஜுன் முண்டா, மதுகோடா, ஹேமந்த் சோரன் ஆகிய அனைவருமே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைத்தவுடன் பழங்குடியினர் இல்லாத ஒருவரான ரகுபர் தாஸை முதல்வர் பதவியில் அமரவைத்தது. இது கட்சிக்குள்ளும், மக்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாநிலத்தில் கால் பங்குக்கு மேல் வசிக்கும் பழங்குடி மக்களின் பிரதிநிதியாக ரகுபர் தாஸ் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தல் நேரத்தில் எழுந்தது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதே பிரச்சாரத்தைக் கையில் எடுத்து பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராகக் கோரி பிரச்சாரம் செய்தனர். ஆனால், ஜாம்ஷெட்பூர் உருக்காலையில் பணியாற்றிய, ஓபிசி வகுப்பைச் சேர்ந்த ரகுபர் தாஸை மீண்டும் முதல்வராக பாஜக முன்னிறுத்தியது. ஆனால், சாதிப்பற்று ஆழ வேரூன்றிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் அது நடக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...