Last Updated : 23 Dec, 2019 09:27 PM

5  

Published : 23 Dec 2019 09:27 PM
Last Updated : 23 Dec 2019 09:27 PM

எதிரிகள் எதைச் செய்ய முடியவில்லையோ அதை பிரதமர் மோடி செய்து தேசத்தின் வளர்ச்சியை நிறுத்துகிறார்: ராகுல் காந்தி காட்டம்

டெல்லியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பேசிய காட்சி : படம்| ஏஎன்ஐ.

புதுடெல்லி,

நமது எதிரிகளால் எதைச் செய்ய முடியவில்லையோ, அதை பிரதமர் மோடி செய்து, தேசத்தின் வளர்ச்சியை நிறுத்துகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடகா, போன்ற மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் இதுவரை 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும், மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஒற்றுமைக்கான சத்தியாகிரகம் டெல்லியில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:

''தேசத்தில் வெறுப்பைப் பரப்பி, துண்டாட பிரதமர் மோடி முயல்கிறார். ஆனால் பாரத மாதாவின் குரலை ஒடுக்கவோ, அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தவோ மக்கள் அவரை விடமாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன்.

பிரதமர் மோடியின் அமைப்பு தேசச்தை எவ்வாறு உடைப்பது, வெறுப்பைப் பரப்புவது என்று அவருக்குக் கற்றுக்கொடுக்கிறது. தேசத்தைப் பிளவுபடுத்துவதிலும், வெறுப்பைப் பரப்புவதிலும் அவருக்கு முதலிடம்.

டெல்லியில் குளிர் கடுமையாக இருந்ததால், தனது தாய் சோனியாவுக்கு சால்வை அணிவித்த ராகுல் காந்தி | படம்: ஏஎன்ஐ

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் குரலை ஏன் ஒடுக்குகிறது என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காதது குறித்தும் பிரதமர் மோடி தேசத்துக்குப் பதில் அளிக்க வேண்டும்.

பிரதமர் மோடி அவர்களே! மாணவர்களைத் துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கும்போது, அவர்களை லத்தியால் தாக்கும்போது, பத்திரிகையாளர்களை மிரட்டும்போது, இந்த தேசத்தின் குரலை நீங்கள் ஒடுக்குகிறீர்கள்.

இந்த தேசத்தின் எதிரிகள் முழு முயற்சியுடன் பொருளாதாரத்தைக் குலைக்க முயல்கிறார்கள். ஆனால், நம்முடைய எதிரிகள் செய்ய முடியாத செயலை, நம்முடைய பிரதமர் மோடி செய்துவிட்டார்.

உடை விஷயத்தில் நீங்கள் ரூ.2 கோடி மதிப்புள்ள ஆடைகள் அணிந்தீர்கள் என்பது இந்த தேசத்துக்கே தெரியும். இது மக்களுக்கான உடை அல்ல. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காமல் பொருளாதாரத்தை அழித்துவிட்டீர்கள். அதனால்தான் வெறுப்புக்குப் பின்னால் மறைந்துள்ளீர்கள்.

அரசியலமைப்புச் சட்டம் மீது தாக்குதல் நடத்தவும், பாரத மாதாவின் குரலை ஒடுக்கவும் இந்த தேசம் உங்களை அனுமதிக்காது''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x