Last Updated : 23 Dec, 2019 08:32 PM

1  

Published : 23 Dec 2019 08:32 PM
Last Updated : 23 Dec 2019 08:32 PM

வெற்றியை ஜார்க்கண்ட் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: மகிழ்ச்சியில் சைக்கிளில் சென்ற ஹேமந்த் சோரன் பேச்சு

ஹேமந்த் சோரன் : கோப்புப் படம்.

ராஞ்சி

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குக் கிடைத்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.

இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களில் முன்னிலையும், பாஜக 25 இடங்களிலும், ஜேவிஎம் கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு கட்சி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இதனால், ஹேமந்த் சோரன் தலைமையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி விரைவில் அமைய உள்ளது.

இந்த வெற்றி குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறுகையில், "ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மீது நம்பிக்கை வைத்து கூட்டணி வைத்த லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய அரசியல் குரு என் தந்தைக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. மாநில அரசுக்கு இது முக்கியமான மைல்கல். மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம். கூட்டணிக் கட்சிகளுடன் அமர்ந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை ஆய்வு செய்வோம். இந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஹேமந்த் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தும்கா தொகுதியில் பாஜகவின் லூயிஸ் மாரண்டியைக் காட்டிலும் 13 ஆயிரம் 188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சைக்கிளில் சென்ற ஹேமந்த்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தேர்தலில் தனது கட்சி வெற்றி முகம் நோக்கி நகர்வதை அறிந்து கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்றார். வீட்டில் அனைத்து செய்தியாளர்களும் ஹேமந்த் சோரனுக்கு 30 நிமிடங்களுக்கு மேலாகக் காத்திருந்தார்கள். ஆனால் வரவில்லை. கட்சி அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது ஹேமந்த் புறப்பட்டுவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

அதன்பின் நீண்டநேரத்துக்குப் பின், வெற்றியின் மகிழ்ச்சியில் சைக்களில் ஜாலியாக ஹேமந்த் சோரன் வீட்டுக்குச் சென்றார். இதைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டுக்குச் சென்ற ஹேமந்த் சோரன், தனது தந்தை சிபுசோரன், தாய் ரூபி சோரன் பாதங்களை வணங்கி அதன்பின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x