Published : 23 Dec 2019 04:42 PM
Last Updated : 23 Dec 2019 04:42 PM
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் ரகுபர் தாஸ், சபாநாயகர் தினேஷ் ஓரான் ஆகியோர் தோல்வியின் விளிம்பில் சிக்கியுள்ளனர்.
மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மாறாக பாஜக 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.
ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக போட்டி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சரயு ராய் போட்டியிட்டார்.
தொடக்கத்தில் முன்னிலையில் சென்ற முதல்வர் ரகுபர் தாஸ், பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கினார். கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து இந்தத் தொகுதியில் தோல்வியைச் சந்திக்காத ரகுபர் தாஸ் முதல் முறையாகத் தோல்வி முகம் நோக்கிச் செல்கிறார்.
பழங்குடிகள், ஆதிவாசிகள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற ரகுபர் தாஸ் அந்த சமூகத்தைச் சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுபர் தாஸ் 18 ஆயிரத்து 874 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராய் 23 ஆயிரத்து 517வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதேபோல ஜார்க்கண்ட் சட்டப்பேரவை சபாநாயகர் தினேஷ் ஓரன் சிஷாய் தொகுதியில் போட்டியிட்டார். இதில் 14 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார். ஓரன் 28 ஆயிரத்து 403 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஜிகா சுசாரன் ஹோரோ 49 ஆயிரத்து 24 வாக்குகளும் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் நிலவரப்படி பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 29 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 3 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 29 இடங்களில் முன்னிலை பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையப்போவதை அடுத்து தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் செயலாளர் பிரணவ் ஜா கூறுகையில், "அரசியலமைப்பின் 370-வது பிரிவு காஷ்மீரில் நீக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மாநிலப் பிரச்சினைகள் என எதையும் சரியாகக் கையாளாத பாஜகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். பணவீக்கம், வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாஜக, பாபுலால் மாரண்டியின் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தான்வர் தொகுதியில் மாரண்டி 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
மற்றொரு முக்கியக் கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பு கட்சியின் தலைவர் சுதேஷ் குமார் மாத்தோ 17 ஆயிரம் வாக்குகளுடன் சில்லி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT