Published : 11 Aug 2015 08:51 AM
Last Updated : 11 Aug 2015 08:51 AM
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தீக்குளித்த காங்கிரஸ் கட்சி தொண்டர் பலியானதைத் தொடர்ந்து நேற்று எதிர்க்கட்சியினர் சார்பில் நடைபெற்ற பந்த் காரணமாக திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை மதியம், திருப்பதி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகுவீரா ரெட்டி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, பொதுக்கூட்ட மேடை அருகே திருப்பதி மஞ்சால வீதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் முனிகோட்டி (43) என்பவர் திடீரென தீக்குளித்தார்.
சென்னையில் உள்ள கீழ் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முனிகோட்டி ஞாயிற்றுக்கிழமை மதியம் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று அவரது உடல் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரது உடலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி உயிர் தியாகம் செய்த முனிகோட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும் திருப்பதியில் நேற்று ஒரு நாள் பந்த் நடத்த கம்யூனிஸ்ட், காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதன் காரணமாக நேற்று திருப்பதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், ஆந்தி ராவில் உள்ள பல்வேறு மாவட்டங் களுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், சாலை மறியல் போராட்டங்கள், தர்ணா போன்றவை நடத்தப்பட்டன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ரூ.5 லட்சம் நிதியுதவி
தீக்குளித்த முனிகோட்டியின் குடும்பத்தாருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தொலைபேசி மூலம் முனிகோட்டியின் குடும் பத்தாரை தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.
ஆந்திராவில் இன்று பந்த்
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால், ஆந்திராவில் உள்ள காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திருப்பதி நகரில் நேற்று பந்த் நடத்தப்பட்டதால், இன்று நடைபெறும் மாநிலம் தழுவிய பந்த்தில் திருப்பதி நகருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் மட்டும் வழக்கம்போல் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கும். கடையடைப்பு கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணா நேற்று திருப்பதியில் தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT