Published : 22 Dec 2019 05:27 PM
Last Updated : 22 Dec 2019 05:27 PM
குடியுரிமைச் சட்டம், என்ஆர்சி சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான தொந்தரவும், பிரச்சினையும் வராது. அதைப் பற்றி கவலைப்படவேண்டாம். எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்த்து இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், குடியுரிமைச் சட்டம் தொடர்பாக விளக்கக் கூட்டம் பாஜக சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்தது.
ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
''வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தாத்பரியம். குடியுரிமைச் சட்டம், என்ஆர்சி சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான தொந்தரவும், பிரச்சினையும் வராது. என்னுடைய அரசில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் எந்தத் திட்டமும் மதம் பார்த்துப் பிரிவினையோடு நடைமுறைப்படுத்தவிடவில்லை.
முஸ்லிம்கள் என் அரசின் சாதனைகளைக் கவனியுங்கள். எதிர்க்கட்சிகளின் ஒலிப்பதிவுகளைக் கவனிக்காதீர்கள். என்னுடைய அரசின் நலத்திட்டங்களான எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம் ஆகியவை ஒருபோதும், மக்கள் கோயிலுக்குப் போகிறார்களா, மசூதிக்குப் போகிறார்களா என்று பார்த்து வழங்கியதில்லை.
குடியுரிமைச் சட்டமோ அல்லது என்ஆர்சி சட்டமோ இந்திய முஸ்லிம்களை ஒன்றும் செய்யாது. அதுகுறித்து அவர்கள் கவலைப்பட வேண்டாம். முஸ்லிம்களைத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் பார்க்கிறார்கள் என்று நகர்ப்புற நக்சல்கள் வதந்திகளைப் பரப்புகிறார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவி தங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்பவர்களைக் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படும்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மக்கள் போராடும்போது அவர்களை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக மவுனமாக எதிர்க்கட்சிகள் இருப்பது, அவர்கள் வன்முறையை ஆதரித்து பள்ளிகளையும், ரயில்களையும் குறிவைப்பது போல் தோன்றுகிறது.
.
ஆனால், மக்களைக் குழப்பும் நோக்குடன் எதிர்க்கட்சிகள் குடியுரிமைச் சட்டம் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக அரசு சட்டத்தை கொண்டுவந்துள்ளதாகக் கூறுகின்றனர். என்னுடைய எதிரிகள் தேர்தலில் போட்டியிடத் துணிச்சல் இல்லாமல், நாட்டைத் துண்டாடும் வதந்திகளில் ஈடுபடுகிறார்கள்.
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவு ஏற்படுத்த ஏன் சதி செய்கிறீர்கள்? குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நீங்கள் நடத்தும் போராட்டத்தில் பொதுச் சொத்துகளை எரிக்காதீர்கள். என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள். ஏழையின் ஆட்டோவை எரிக்காதீர்கள். உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் என்னை வெறுத்து ஒதுக்குங்கள்,
இந்தியாவில் எந்தவிதமான தடுப்புக் காவல் முகாம்களும் இல்லை. எந்த முஸ்லிம் மக்களும் தடுப்புக் காவலில் வைக்கப்படமாட்டார்கள். குடியுரிமைச் சட்டம், என்ஆர்சி தொடர்பாகத் தேவையில்லாத பொய்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. இந்த நாட்டின் இளைஞர்கள் கல்விக்கு மதிப்பளித்து குடியுரிமைச் சட்டத்தை விரிவாகப் படித்துப் பாருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள். இதுபோன்ற வதந்திகள் பரப்புவதைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. இந்தியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வெளிநாட்டு மக்களுக்கே பொருந்தும். புதிய அகதிகள் யாரும் பலன்பெற மாட்டார்கள்’’.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT