Published : 22 Dec 2019 11:33 AM
Last Updated : 22 Dec 2019 11:33 AM
உள்ளாட்சித் தேர்தல் வரை ஆய்விற்காக தமிழகம் வர வேண்டாம் என நாடாளுமன்ற எம்.பி.க்கள் நிலைக்குழுக்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடம் கோரப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றம் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் அதன் எம்.பி.க்கள் அடங்கிய நிலைக்குழுக்கள் மத்திய அமைச்சகங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநிலங்கள் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்வது அதன் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.
இவர்களுடன் வரும் மத்திய அரசு அதிகாரிகளையும் மாநில அரசுகள் தம் விருந்தினர்களாக வரவேற்பளித்து ஆய்விற்காக உதவுவதும் வழக்கம். இதற்காக அக்குழுக்கள் தமிழகத்திற்கும் சுற்றுப்பயணமாக வருவது உண்டு.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதால், நாடாளுமன்ற நிலைக்குழுவின் வரவு அதன் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகவும் அமைந்து விடும். இதனால், எதிர்க்கட்சிகள் தம் மீது புகார் செய்யாமலும் இருக்க தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு கடந்த டிசம்பர் 4-ல் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை, தமிழக அரசு பொதுத்துறையின் முதன்மைச் செயலாளரும், முதல்வரின் தனிச்செயலாளருமான டாக்டர்.பி.செந்தில்குமார் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
இது குறித்த தனது கடிதத்தில் முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் கூறும்போது, ''டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தத் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளன.
இதனால், மத்திய மற்றும் இதர மாநில அரசுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் சுற்றுப்பயணத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க இயலாது. இது தேர்தல் பணிக்காக வரும் அதிகாரிகளுக்கு மட்டும் பொருந்தாது'' எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, நாடாளுமன்ற இருஅவைகளின் நிலைக்குழுக்கள் தங்கள் தமிழக சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளனர். மத்திய அரசின் அதிகாரிகளும் தங்கள் ஆய்வு மற்றும் இதர அதிகாரபூர்வப் பணிகள் மீதான தமிழக பயணங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
தமிழக அரசின் இந்த சுற்றறிக்கை மத்திய அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதை ஏற்று, அதன் சார்பில் தமிழக பயணங்கள் உள்ளாட்சித் தேர்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT