Published : 19 Dec 2019 01:54 PM
Last Updated : 19 Dec 2019 01:54 PM
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-ம் முறையாகப் பதவியேற்ற பிறகு தற்போது, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று தற்போது இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இப்போது இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா சுதந்திரமடைந்தபோது பிரிந்து சென்ற தற்போதைய நாடுகள் பாகிஸ்தான், வங்கதேசம். மதரீதியான கொடுமைக்கு ஆளான அந்நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு விளக்கம் கொடுக்கிறது. ஆனால் இஸ்லாமியர்களும், மற்றவர்களும் விடுபட்டது ஏன் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன.
குடியுரிமைச் சட்டம் என்றால் என்ன?
இந்த நாட்டின் குடிமக்கள் யார், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியர்கள் யார் எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக கடந்த 1955-ம் ஆண்டில் இயற்றப்பட்டதுதான் குடியுரிமைச் சட்டம்.
இதன்படி இந்திய குடிமக்கள் யார், அவர்களுக்கான உரிமைகள் என்ன உள்ளிட்டவை வரையறுக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்.
அவர்கள் அகதிகளா அல்லது ஊடுருவல்காரர்களாக என்பதைப் பொறுத்து, பரிசீலனை செய்து மத்திய அரசு குடியுரிமை வழங்கும்.
சட்டத்தில் திருத்தம்
இந்தச் சட்டத்தில்தான் மத்திய அரசு தற்போது திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பெளத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தால் சர்ச்சை; எதிர்ப்பாளர்களின் வாதம்
* இந்தச் சட்டம் மதரீதியாகப் பாகுபாடு பார்க்கிறது. இது நமது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாதத்தை முன் வைக்கின்றன.
* அதுபோலவே இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
* அகதிகள், மதரீதியான ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் பாகிஸ்தானில் அகமதியா முஸ்லிம்கள், ஷியா முஸ்லிம்கள் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.
* மியான்மரில் ஆளும் அரசால் துன்புறுத்தப்படும் ரோஹிங்கியாக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
அதுபோலவே இலங்கையில் பெரும் பாதிப்பைச் சந்தித்து தமிழகத்தில் அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை என தமிழக அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
மத்திய அரசின் வாதம்
இந்தச் சட்டத்தில் மதரீதியாக குடியுரிமை என்ற கருத்தே தவறானது என மத்திய அரசு விளக்கம் கொடுக்கிறது.
‘‘முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் உள்ள இஸ்லாமியர் அல்லாத மக்கள் பலர் மதரீதியான கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறா்கள். அவர்கள் மதமாற்றம் செய்யப்படுவது, கொலை செய்யப்படுவது, அடித்து விரட்டப்படுவது போன்ற துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். உலகில் வேறு எந்த நாட்டிலும் சென்று தஞ்சமடைய முடியாத சூழலில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால் குடியுரிமை வழங்குகிறாம்’’ என மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.
‘‘அதுபோலவே ரோஹிங்கியாக்கள் மதரீதியாகப் பிரச்சினையை எதிர்கொள்வதைவிடவும் மொழி மற்றும் இன ரீதியாகவே பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி வந்தாகக் கூறி அவர்களை மியான்மர் அரசு விரட்டுகிறது. எனவே அதற்கு இந்தியாவுடன் நேரடித் தொடர்பு ஏதுமில்லை’’ என மத்திய அரசு கூறுகிறது.
‘‘இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் விரும்புவது இரட்டைக் குடியுரிமை. அவர்கள் இலங்கைக்குத் திரும்பி அங்கு சுதந்திரம் மற்றும் சகல உரிமைகளும் கொண்ட குடிமக்களாகவே வாழ விரும்புகின்றனர். அகதிகளாக இருக்கும் தங்களுக்கு இந்தியாவில் இருக்கும் வரை தேவை உதவிகள் மற்றும் சலுகைகள் பெறவும் வசதியாக இந்தியாவிலும் குடியுரிமை தேவை என்பதே அவர்கள் வாதம். அதனால் அவர்கள் பிரச்சினையை இதனுடன் பொருத்திப் பார்க்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து இங்கு நிரந்தரமாகத் தங்கவிட விரும்பும் மக்களுக்காகவே குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் இருநாடுகளில் குடியுரிமையை விரும்பும் மக்களின் பிரச்சினையை தனியாகவே அணுக வேண்டும். அவ்வாறு அணுகப்படும்’’ என மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.
வடகிழக்கில் எதிர்ப்பு ஏன்?
இஸ்லாமியர்களை ஏன் சேர்க்கவில்லை என நாட்டின் மற்ற பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் உட்பட மற்றவர்களுக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என வலியுறுத்தி வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
குடியுரிமைச் சட்டத்தின்படி வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிற உரிமைகள் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர்.
அசாமில் சில லட்சம் அளவில் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் பழங்குடியினர் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என பழங்குடியின மக்கள் எதிர்க்கின்றனர்.
ஆனால், ‘‘அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், இந்தப் பகுதிகளில் உட்கோட்டு அனுமதி பெற்றுச் செல்லும் பகுதியாகவே செயல்படும்’’ என மத்திய அரசு கூறுகிறது.
பிரதமர் விளக்கம்
வடகிழக்கு மக்களின் அரசியல், மொழி, கலாச்சாரம் மற்றும் நிலவுரிமையைப் பாதுகாக்க அரசியல் சட்டம் பிரிவு 6-ன் கீழ் வழங்கியுள்ள பாதுகாப்பு வலிமையுடன் தொடர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடியும் உறுதி அளித்துள்ளார்.
இந்த விவகாரம் வேண்டுமென்றே அரசியலாக்கப் படுவதாகவும், மதரீதியாக மத்திய அரசு அணுகவில்லை என்றும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்றும் இந்திய முஸ்லிம்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கும் எண்ணம் இல்லை எனவும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கம் அளித்துள்ளனர். அதுபோலவே வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதாகவும் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பதிலளித்துள்ளனர்.
நீதிமன்றம் முடிவு செய்யும்
இந்நிலையில் இந்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடம் வீணான வதந்தி கிளப்பப்படுவதால் அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்தச் சட்டம் தொடர்பாக ஆடியோ, வீிடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT