Last Updated : 19 Dec, 2019 08:24 AM

 

Published : 19 Dec 2019 08:24 AM
Last Updated : 19 Dec 2019 08:24 AM

தமிழக நிதி நிலுவைகளை அனுப்பி வைக்குமாறு மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகங்களில் இருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவிலான நிதி அனுப்பப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் செலவுகளுக்காக இவற்றை மாநில அரசுகள் பயன்படுத்துவது வழக்கம்.

மத்திய அரசின் நிதி நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவை அதன் அமைச்சகங்களில் நின்று விடுவது உண்டு. சிலசமயம், அதற்கான முறையான செலவுப்பட்டியலை மாநில அரசுகள் அளிக்காத காரணத்துக்காகவும் மத்திய அரசு தனது நிதித்தொகையை நிறுத்தி வைக்கும்.

இதுபோன்ற, நிதித்தொகை வரவை வசூலிக்க மாநில அரசுகள் மத்திய அமைச்சகங்களுக்கு கடிதம்எழுதும். இதில் பல மாநில அரசுகளின் அமைச்சர்கள் தமது துறை அதிகாரிகளுடன் நேரடியாக டெல்லி வந்து மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

இன்னும் சில அரசுகளின் முதல்வர்கள், பிரதமர் அல்லது நிதி அமைச்சரை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கும்போது மனு அளிப்பதும் உண்டு. ஆனால், மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த மாநில அரசுகளுக்கு இதுபோன்ற நிலை அதிகம் வருவதில்லை. சிலசமயம் மத்தியில் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் அரசுகளுக்கும் அதன் பலன் கிடைக்கும்.

தமிழகத்தின் அதிமுக அரசை பொறுத்தவரை அதன் முதல்வராக ஜெயலலிதாவே நேரடியாக பிரதமர் அல்லது நிதி அமைச்சரிடம் பேசி தமது மாநில நிலுவையை வசூலிப்பது வழக்கமாக இருந்தது. அவருக்கு பிறகு முதல்வர்களாக வந்த ஒ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் தன் அமைச்சர்களை நேரடியாக டெல்லிக்கு முதன்முறையாக அனுப்பி வைத்தனர்.

இவர்களில் பல அமைச்சர்கள் மாதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் நிதியை வசூலிக்க டெல்லி வருவது அதிகரித்து வருகிறது. இந்தச்சூழல் தொடரும் நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தமது அரசுக்கு வரவேண்டிய சுமார் 24 வகையான மத்திய அரசின் நிதியான ரூ.12,072.43 கோடியை குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். இதன் நகலை இணைத்து பிரதமர் நரேந்திர மோடி அலுவலக இயக்குநரான ராஜேந்திர குமார் கையெப்பமிட்டு, தமிழக அரசின் நிலுவை நிதியை உடனடியாக அனுப்பி வைக்கும்படி மொத்தம் 14 அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது 2017-18 ஆண்டுக்கான நிலுவை மற்றும் 2018 -19 ஆண்டின் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் தவணை தொகையாகும்.

இதன் நகல் கிடைத்திருக்கும் ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய அமைச்சகங்கள் வட்டாரங்கள் கூறும்போது, ‘ஒரு மாநில அரசின் நிதி நிலுவைக்காக பிரதமரிடம் இருந்து வலியுறுத்தல் கடிதம் அரிதாகவே வரும். நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது பிரதமர் அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு போன் செய்து தமிழகத்தின் நிதியை உடனடியாக அனுப்ப வலியுறுத்துகின்றனர்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து அரிதாகக் கடிதம் வந்தாலும் தொலைபேசி தகவல்கள் வருவது மிகவும் அரிது. பிரதமர் மோடியின் உத்தரவில்லாமல் இதுபோல் அவரது அலுவலகத்தில் எவரும் செய்ய முடியாது. இந்த நடவடிக்கை குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு அதிமுக அளித்த ஆதரவே காரணம்’ எனத் தெரிவித்தன.

மக்களவை தேர்தலில் மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. இதன் பலனாக தனது நிலுவை நிதிகளை வசூலிப்பதில் அதிமுக அரசுக்கு வெற்றி கிடைத்து வருகிறது. இந்த நிலுவையில் சில அமைச்சகங்களில் இருந்து தமிழக அரசின் நிலுவை நிதி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x