Published : 19 Dec 2019 07:16 AM
Last Updated : 19 Dec 2019 07:16 AM

ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு காண ரேஷன் கடைகளில் முட்டை, மீன், இறைச்சி: மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய நிதி ஆயோக் முடிவு

புதுடெல்லி

ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைக்குத் தீர்வு காண பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் மானிய விலையில் முட்டை, மீன், இறைச்சி வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது.

நிதி ஆயோக் என்பது நாட்டின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். கடந்த 2014-ல் இது கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் மீன், முட்டை, இறைச்சியை பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்ய முடிவெடுத்துள்ளது.

தொலைநோக்கு திட்டம்

நிதி ஆயோக் தயாரித்துள்ள 15 ஆண்டு தொலை நோக்குத் திட்டத்தில் இந்த பரிந்துரை இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஏப்ரல் மாதம் இது அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிதி ஆயோக் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறும்போது, “ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வகைகளை விரிவுபடுத்த நிதி ஆயோக் பரிசீலித்து வருகிறது. அதில் மீன், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவையும் அடங்கும்.

நாட்டில் நிலவி வரும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையைத் தீர்க்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழிப்புணர்வு திட்டம்

புரதச் சத்து மிக்க உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் வழங்குவதால் அது ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் கோதுமை, அரிசி, ரவை, பருப்பு வகைகளுடன் மீன், முட்டை, கோழி இறைச்சி போன்றவையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் மக்களிடையே புரதச் சத்து மிக்க உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள மக்கள் எண்ணெய் சத்து அதிகம் உணவுகள், சர்க்கரை சத்து, மசாலா மிகுந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதால் சுகாதாரக் கேட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு போதுமான புரதச் சத்தை அளிக்கும்போது ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை தீர வாய்ப்புள்ளது” என்றார்.

19.5 கோடி மக்கள் பாதிப்பு

உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ள போதிலும், ஊட்டச்சத்து குறைபாடு பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது என ஐ.நா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் சுமார் 19.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x