Published : 18 Dec 2019 05:22 PM
Last Updated : 18 Dec 2019 05:22 PM
திருச்சூரில் ஆர்எஸ்எஸ் ஆதரவு ஏபிவிபி மாணவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு எஸ்எப்ஐ மாணவர்களும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்தநிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கேரள வர்மா கல்லூரியில் ஆர்எஸ்எஸ் ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் கடந்த திங்களன்று குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி வளாகத்துக்கு வெளியே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்தநிலையில் இதனை கண்டித்து ஏபிவிபி சார்பில் இன்று கல்லூரி புறக்கணிப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் நடந்தது
#WATCH Kerala: Students' Federation of India (SFI) workers thrash an ABVP worker at Sree Kerala Varma College, Thrissur. ABVP had called for a strike on campus today following an altercation with SFI on Dec 16. ABVP had also allegedly thrashed 4 SFI workers earlier today. pic.twitter.com/N7onEK8Qkt
— ANI (@ANI) December 18, 2019
இந்த நிலையில் போராட்டம் நடத்திய தங்கள் மீது இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக ஏபிவிபி மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தலையிட்டு மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT