Published : 23 Aug 2015 12:51 PM
Last Updated : 23 Aug 2015 12:51 PM
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்கு, நிலம் கையகப் படுத்தும் சட்டத்தின் கீழ் நிலங்களை கையகப்படுத்த மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு விசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதிக்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள 29 கிராமங்களில் முதல்கட்டமாக 3,892 ஏக்கர் விவசாய நிலத்தை, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கையகப்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முதல்கட்ட அறிவிக்கையை குண்டூர் மாவட்ட ஆட்சியர் காந்திலால் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதன்படி தூளூரு, அனந்த வரம், போயபாளையம், பிச்சிகல பாளையம், அப்பராஜு பாளையம், சாகமூரு, தொண்டபாடு உள் ளிட்ட 10 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மேலும் 19 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த மற்றொரு அறிவிக்கையை மாநில அரசு வெளியிட உள்ளதாக கூறப் படுகிறது. இந்நிலையில் அரசின் அறிவிக்கைக்கு இப்பகுதிகளின் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமலும் போதிய இழப்பீடு வழங்காமலும் அரசு இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் நேற்று முன்தினம் விஜயவாடாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைவில் விவசாய ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக இவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT