Last Updated : 13 Dec, 2019 10:37 AM

 

Published : 13 Dec 2019 10:37 AM
Last Updated : 13 Dec 2019 10:37 AM

அசாம் போராட்டத்தை அடக்க என்.ஐ.ஏ. ஐஜி ஜி.பி. சிங்கை அனுப்பியது மத்திய அரசு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அசாமில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி போராட்டமாக வெடித்ததையடுத்து தேசிய விசாரணை முகமையின் ஐ.ஜி. ஜி.பி. சிங்கை அங்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜி.பி.சிங் புதன் இரவு அசாமுக்கு அனுப்பப்பட்டார்.

ஜி.பி.சிங்கின் பதவிக்காலம் நவம்பர் 2020-உடன் முடிவடைகிறது. அசாமில் போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜி.பி.சிங்கை அங்கு விரைய உத்தரவிட்டார். அசாம் நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வ சர்மாவை சந்தித்த பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முகேஷ் அகர்வாலுக்குப் பதிலாக ஜி.பி.சிங்கை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவைப் பெறும்போது ஐ.ஜி. ஜி.பி.சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அவர் அங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் தெரிவிக்கும் போது அசாம் நிலைமைகளை மத்திய அரசு நெருக்கமாக அவதானித்து வருகிறது என்றும் இணையதள சேவை முடக்க முடிவு உளவுத்துறை செய்திகளை அடுத்தே மாநில அரசினால் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

அசாமில் உல்பா தீவிரவாதிகள் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஜிபி.சிங் தன் ஆரம்பக் காலக்கட்டங்களில் நிறைய நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர். என்.ஐ.ஏ.வுக்கு 2013-ல் அவர் வந்து சேர்ந்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் புல்வாமா தாக்குதல் தொடர்பான தீவிரவாத நிதிதிரட்டல் குறித்த விசாரணைகளை 2017ல் தலைமை தாங்கினார் ஜி.பி.சிங். வடகிழக்கு மற்றும் பஞ்சாபின் எல்லை தாண்டிய ஆயுதங்கள் கடத்தல் விவகாரங்கள் தொடர்பாக பல அமைப்புகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் சிங்.

மத்திய அரசின் மூலம் சொந்தப் பாதுகாப்பு பெற்ற சில உயரதிகாரிகளில் சிங்கும் ஒருவர். இவருக்கு எப்போதும் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்து கொண்டேயிருப்பார்கள். பல்வேறு தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் விசாரணையாளராகவும், கண்காணிப்பாளராகவும் இவர் இருந்து வந்த நிலையில் தற்போது அசாமுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x