Published : 12 Dec 2019 11:22 AM
Last Updated : 12 Dec 2019 11:22 AM
அசாம், திரிபுரா மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு மாநிலங்களிலும் பாசஞ்சர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குவஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும். ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள்.
வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அசாம் மற்றும் திரிபுராவில் இன்றும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் டயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
அசாம், திரிபுரா மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு மாநிலங்களிலும் பாசஞ்சர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குவஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே இரு மாநிலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ரயில்வே பாதுகாப்புக்காக கூடுதலாக 13 கம்பெனிகள் துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT