Published : 12 Dec 2019 10:56 AM
Last Updated : 12 Dec 2019 10:56 AM
இந்திய பெருமுதலாளிகளுக்காக நிதி சேவை மைய மசோதா அறிமுகப்படுத்தப்படுவதாக மக்களவையில் சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் மீதான விவாதத்தில் அக்கட்சியின் மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார்.
இதுகுறித்து இன்று மக்களவையில் சு.வெங்கடேசன் பேசியதாவது:
சர்வதேச நிதி சேவை மைய மசோதாவின் பின்னணியில் இந்திய பெரு முதலாளிகளுக்கு உலக சந்தையை விரிவுபடுத்தவும், இந்திய முதலாளிகளை பன்னாட்டு முதலாளிகளாக மாற்றுவதும் உள்ளது.
நீண்ட காலமாக சர்வதேசிய நிதி மூலதனத்தினுடைய நிர்பந்தத்தால், இத்தகையதொரு மையம் உருவாக்க முயற்சிக்குப் படுகிறது. ரிசர்வ் வங்கி சட்டம், இன்சூரன்ஸ் சட்டம், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் உள்ளிட்ட 14 சட்டங்களில் திருத்தங்களை இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஆணையம் நிறுவப்படுகிறது. அதிலும் மிக முக்கியமாக பிரிவு 25 ஐ மிக ஆபத்தான ஒரு பிரிவாக நாங்கள் கருதுகிறோம்.
ஏனென்றால் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்கள் எதுவும் இவற்றை விசாரிக்கவோ அல்லது இதன் மீதான கேள்விகளை எழுப்பவோ முடியாத அளவுக்கு ஒரு உச்ச அதிகார அமைப்பாக இந்த ஆணையத்தை நீங்கள் நிறுவுகிறீர்கள்.
உண்மையில் 1999 இல் ஏற்பட்ட தெற்காசிய நிதி நெருக்கடி, 2008 இல் ஏற்பட்ட உலக மூலதன நிதி நெருக்கடி ஆகிய இரண்டிலும் இந்திய பொருளாதாரம் பெரிய அளவுக்கு பாதிக்கப்படாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
அதில், ஒன்று இங்கே இருந்த வலிமையான பொதுத்துறை நிறுவனங்கள். இன்னொன்று நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தப் பாதுகாக்கின்ற இதைப்போன்ற சட்டங்கள்.
இந்த இரண்டும் தான் மிக முக்கியமானது. ஆனால் இந்த சட்டங்களை எல்லாம் தகர்ப்பதன் மூலம் அல்லது இதற்கெல்லாம் விதிவிலக்கான அமைப்புக்களை உருவாக்குவது உலக அளவிலேயே பெரும் ஆபத்தானது என்ற கருத்து கணிப்புகள் வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
இன்றைக்கு ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனுபவம் பெற்ற நிதி நிறுவனங்களுடைய ஆலோசனைகள் பல மட்டங்களிலும் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது என்பதை தேர்தல் பத்திரம் உள்ளிட்ட விஷயங்களிலே நாம் பார்க்கிறோம்.
இன்றைக்கு இந்திய பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருக்கிற ஒரு சூழலில் இது போன்ற ஒரு ஆணையத்தை உருவாக்க இன்னும் ஆழமான பரிசீலனை தேவை. எனவே இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT