Last Updated : 12 Dec, 2019 10:49 AM

 

Published : 12 Dec 2019 10:49 AM
Last Updated : 12 Dec 2019 10:49 AM

பஞ்சாப் பல்கலைகழகத்தில் 18 வருடங்களாக காலியாக இருக்கும் தமிழ் பேராசிரியர் பணி:  மக்களவையில் நவாஸ் கனி வலியுறுத்தல் 

புதுடெல்லி

பஞ்சாப் பல்கலைகழகத்தில் 18 வருடங்களாக தமிழ் பேராசிரியருக்கானப் பணி காலியாக உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு உதவ வேண்டும் என மக்களவையில் நேற்று முஸ்லிம் லீன் எம்.பியான கே.நவாஸ்கனி வலியுறுத்தினார்.

இது குறித்து பூஜ்ஜிய நேரத்தில் ராமநாதபுரம் எம்.பியான கே.நவாஸ்கனி பேசியதாவது: யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ளது பழம்பெருமை வாய்ந்த பஞ்சாப் பல்கலைகழகம். இது பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய அரசின் நிதியால் செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த 1966 ஆம் வருடம் தென்னிந்திய மொழிகள் துறை துவக்கப்பட்டது. இதன் நோக்கம் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை மாணவர்களுக்கு போதிப்பது ஆகும்.

எனினும், இதில் தமிழுக்காக மட்டும் நிரந்தரப் பணியில் ஒரு உதவிப்பேராசிரியர் 1967 இல் அமர்த்தப்பட்டிருந்தார். மற்ற மொழிகளுக்கு தற்காலிகப் பணியில் சிலர் அமர்த்தி அதன் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழுக்கானப் பேராசிரியர் முனைவர்.கு.ராமகிருட்டினண் தம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது முதல் அப்பணியில் எவரும் அமர்த்தப்படாமல் 18 வருடங்களாகக் காலியாக உள்ளது.

மற்ற மொழிகளுக்கான வகுப்புகளும் முறையாக நடத்தப்படுவதில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டப்பேரவையின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பு அளித்தார்.

அதில் அவர், பஞ்சாப் பல்கலைகழகத்தில் தமிழ் பேராசிரியர் பணியமர்த்த தமிழக அரசு நிதி அளித்து உதவும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்காக, தமிழக அரசு பஞ்சாப் பல்கலைகழகத்திற்கு கடிதங்களும் எழுதியுள்ளது.

எனவே, பஞ்சாப் பல்கலைகழகத்தில் தமிழ் பாடங்கள் மீண்டும் போதிக்க மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை தலையிட்டு தீர்வு காண வலியுறுத்துகிறேன். இதன்மூலம், செம்மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இத்துடன் தென்னிந்தியாவின் மற்ற மொழிகளான தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியவையும் பஞ்சாப் பல்கலைகழகத்தில் போதிக்க மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை தலையிட்டு தீர்வு காண வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

’இந்து தமிழ்’ செய்தி எதிரொலி

மக்களவையில் எழுப்பப்பட்ட இப்பிரச்சனை ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் தாக்கமாக அமைந்துள்ளது. பஞ்சாப் பல்கலைகழகத்தில் ஓய்வுபெற்ற முனைவர்.கு.ராமகிருட்டிணன் பேட்டி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பஞ்சாப் பல்கலைழகத்தின் தமிழ் பேராசிரியர் பணிக்கு ரூ.12 லட்சம் வருடந்தோறும் ஏற்கும் என அறிவித்திருந்தார். இது குறித்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பஞ்சாப் பல்கலைகழகப் பதிவாளர் முனைவர்.கரம்ஜித் சிங்கிற்கு கடிதம் எழுதியும் பலனில்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x