Published : 12 Dec 2019 10:24 AM
Last Updated : 12 Dec 2019 10:24 AM
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடு முழுதும் எதிர்ப்புப் போராட்டங்கள் கிளம்பியுள்ளன. அசாம் மாநிலத்தில் வியாழன் காலையே ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் குவஹாத்தியில் அனுப்பப்பட்டுள்ள ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சிஏபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் எதிர்ப்புப் போராட்ட மையமாக அசாம் மாநிலத்தின் குவஹாத்தி திகழ்கிறது. இதனையடுத்து புதன் இரவு அங்கு காலவரையரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 4 இடங்களில் ராணுவமும், திரிபுராவில் அசாம் ரைபிள்ஸ் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் குவஹாத்தியில் 11 மணிக்கு போராட்டத்தை அறிவித்தது. மக்கள் வீடுகளை விட்டு வந்து சாலைகளில் இறங்கி அமைதிப் போராட்டம் நடத்த கிரிஷக் முக்தி சங்ரம் சமிதி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர், மக்கள் இரவில் ஊரடங்கு உத்தரவுகளை மீறி சாலைகளில் போராட்டம் நடத்தினர்.
சூழ்நிலை மிகவும் பதற்றமாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் அங்கு ராணுவம் வியாழன் காலை கொடி அணிவகுப்பு நடத்தினர். ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலினால் சாலைகளில் வாகனங்கள் தேங்கிக் கிடக்கின்றன. 6 வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேரு பகுதிகளில் பாஜக மற்றும் அசாம் கணபரிஷத் தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் அசாம் ஏடிஜிபி முகேஷ் அகர்வால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “அடுத்த உத்தரவுகள் வரும் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கும். இங்குள்ள நிலைமை நெருக்கமாக கண்காணிக்கப்படுகின்றன. இதுவரை சூழ்நிலை கட்டுக்குள் இருக்கிறது” என்றார்.
திப்ருகர், சாத்யா, தேஜ்பூரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் தாக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ், அமைப்பின் அலுவலர் ஒருவர் பிடிஐ-யிடம் தெரிவித்தார். அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் வீடும் தாக்கப்பட்டது.
லோக்சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே அசாமில் எதிர்ப்புகள் கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT