Published : 11 Dec 2019 01:28 PM
Last Updated : 11 Dec 2019 01:28 PM
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியர்களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள், இனிமேலும் இருப்பார்கள் என்று மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு 7 மணிநேரத்துக்கும் மேலாக நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்கள் 20 சதவீதத்துக்கும் குறைந்துவிட்டது. இந்த 3 நாடுகளும் சிறுபான்மை மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கவில்லை.
மதரீதியாகத் துன்புறுத்தல்களைச் சந்தித்து இந்தியாவில் அடைக்கலம் வந்து பரிதாபமான வாழ்க்கையை வாழும் சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமைத் திருத்த மசோதா நிச்சயம் மிகப்பெரிய நிம்மதியை வழங்கும்.
பாகிஸ்தான், வங்கதேசச்தில் மதச்சிறுபான்மை மக்கள் அங்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள், அல்லது கொல்லப்படுகிறார்கள். இதற்கு அஞ்சி அங்கிருந்து பலர் தங்கள் குடும்பத்தையும், மதத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவுக்கு வந்துள்ளார்கள்.
குடியுரிமைத் திருத்த மசோதாவைக் கொண்டுவருவோம் என்று தேர்தல் நேரத்தில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மக்களும் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால், இந்த மசோதா முஸ்லிம் மக்களுக்கு எதிரானது எனப் பொய்யான பிரச்சாரம் பரப்பிவிடப்படுகிறது. நிச்சயம் இந்த மசோதா வாக்குவங்கிக்காக கொண்டுவரப்படவில்லை
இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் இந்த மசோதா குறித்து அச்சப்படத் தேவையில்லை. யாரேனும் உங்களை இந்த மசோதா குறித்து அச்சுறுத்தினால் நீங்கள் அஞ்ச வேண்டாம். இது நரேந்திர மோடி அரசு அரசியலமைப்புச் சட்டப்படி அரசை நடத்துகிறது, சிறுபான்மை மக்களுக்கு உரியப் பாதுகாப்பை வழங்கும். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியர்களாக வாழ்ந்தார்கள், இந்தியர்களாக வாழ்கிறார்கள், இந்தியர்களாகவே வாழ்வார்கள்.
இந்த மூன்று நாடுகளில் இருந்து சுதந்திரத்துக்குப்பின் மதச்சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்துள்ளார்கள் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.
அதேசமயம், இந்த மசோதாவில் வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி, சமூக அடையாளம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்
ஆனால், மாநிலங்களவையில் உள்ள பல்வேறு எம்.பி.க்கள் குடியுரிமைத் திருத்த மசோதாவைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள். இந்த மசோதா குறித்த விவாதத்துக்குப்பின் மசோதா குறித்தும், எதிர்க்கட்சிகள் தீர்மானம் குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரினார்கள்.
அவையில் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுக் கோஷமிட்டதால், அவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT