Published : 10 Dec 2019 09:13 PM
Last Updated : 10 Dec 2019 09:13 PM
இரு தேசக் கோட்பாட்டை யார் கொண்டுவந்தார்கள் எனும் வரலாற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நன்று படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இரு தேசக் கோட்பாட்டை இந்து மகாசபாவும், முஸ்லிம் லீக் தான் கொண்டுவந்தன எனும் வரலாற்றை மறந்து அமித் ஷா பேசியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது
குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். அப்போது, நாட்டில் மதரீதியாக பிரிவினையை ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம்சாட்டினார்.
அமித் ஷாவின் இந்த குற்றச்சாட்டுக்குக் காங்கிரஸ் கட்சி இன்று பதில் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், " அமித் ஷா மக்களவையில் நேற்று காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேசியது அடிப்படை ஆதாரமற்றவை. மக்களிடம் பொய்களைப் பரப்பியுள்ளார்.
சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்தபோது இந்து மகாசாபா அல்லது முஸ்லிம் லீக் யாரேனும் ஒருவர் அரசை நடத்தி இருக்கலாம். இந்து மகாசபாவுக்கும், முஸ்லில் லீக்கிற்கும் வரலாற்று ரீதியாக உறவு இருக்கிறது. ஒருவகையான வகுப்புவாதம் உயிர்ப்பித்து வாழ மற்றொரு வகையான வகுப்புவாதம் அவசியம்.
அதனால்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய வரலாற்றை முறையாகப் படித்துவிட்டு, மக்களிடம் பேச வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பும், பாஜகவின் பங்களிப்பும் குறித்தும் விவாதம் வைத்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், " அமித் ஷா நேற்று அரசியலமைப்பில் மட்டும் தோற்கவில்லை, வரலாற்றுப் பாடத்திலும் தோற்றுவிட்டார். சவார்க்கர், ஜின்னா இருவரும்தான் இரு தேசக் கோட்பாட்டை முன்வைத்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்களால்தான் இந்தியாவின் ஆன்மா ரத்தம் வடிக்கிறது" எனத் தெரிவித்தார்
இந்திய அரசியலில் பிராந்திய கட்சிகளின் பங்கு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்றார். அப்போது அமித் ஷா கருத்துக்குப் பதில் அளித்து சசி தரூர் பேசுகையில், " என்னைப் பொறுத்தவரை அமி்த் ஷா வரலாற்று பாடவகுப்புகளில் கவனமில்லாமல் இருந்திருப்பார் என நினைக்கிறேன்.
சுதந்திரப் போராட்ட முழுவதிலும், காங்கிரஸ் கட்சி மட்டுமே அனைத்து மதங்களுக்கானது இந்தியா எனக் கூறி ஒவ்வொருவரையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியுடன் மாறுபட்ட கருத்துடன் இருந்தது இந்து மகாசபா. கடந்த 1935-ம் ஆண்டில் இந்து, முஸ்லிம் தனித்தனியாகப் பிரிந்து நாடாக வேண்டும் என்று பேசியது. இந்து மகாசாபாவின் கருத்தை முஸ்லிம் லீக்கின் தலைவர் முகமது அலி ஜின்னாவும் வலியுறுத்தினார்
இந்த இருவரும்தான் இந்துக்களும், முஸ்லிம்களும் தனித்தனியாகப் பிரிய வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், 1945-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம் தலைவராக இருந்தார் அவர் மவுலானா ஆசாத். ஒருவரின் குடியுரிமையை, தேசியத்தை மதத்தை வைத்து தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சி அடிப்படையில் இருந்து எதிர்க்கும்.
அனைத்துக்கும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். டெல்லியில் மோசமான வானிலை நிலவினால்கூட அதற்குக் காங்கிரஸ், நேருவும்தான் காரணம் என்று பேசுவார்கள் " எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT