Published : 07 Dec 2019 06:52 PM
Last Updated : 07 Dec 2019 06:52 PM
நீதி என்பது உடனடியாக கிடைத்துவிடும் பொருளல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கருத்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான என்கவுன்ட்டருக்கு பெரும்பாலான மக்களும், அரசியல் கட்சியினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயத்தில், ஒருசில தரப்பினர், இந்த என்கவுன்ட்டருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு வழக்கிலும் நீதிமன்ற தீர்ப்பு வரை காத்திருக்க வேண்டும் என்பதும், சட்டத்தை போலீஸார் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதும் அவர்களின் வாதங்களான உள்ளன.
இந்தநிலையில் ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கருத்து தெரிவித்துள்ளார். சம்பவத்தை நேரடியாக குறிப்பிடாமல் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இன்று நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
‘‘நாட்டில் சமீபகாலமாக நடந்த சில சம்பவங்கள் பழைய விவாதத்துக்கு புதுத்தெம்பை ஊட்டியுள்ளது. கிரிமினல் வழக்குகளை முடித்து வைப்பதில் ஏற்படும் தொய்வு மனப்பான்மையை மாற்றப்பட வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், நீதி என்பது எப்போதுமே உடனடியாக கிடைத்துவிடும் பொருளல்ல. அதேவேளையில், பழிவாங்கும் போக்கை நீதி எப்போதுமே கையில் எடுக்கக்கூடாது. அப்படி பழிக்குப்பழி என்ற நிலைப்பாட்டுக்கு மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்.’’
இவ்வாறு பாப்டே பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT