Published : 07 Dec 2019 09:06 AM
Last Updated : 07 Dec 2019 09:06 AM
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண் டிசம்பர் 5ம் தேதியன்று 5 நபர்களால் தீவைக்கப்பட்டார், அதன் பிறகு தீக்காயங்களுடன் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் போராடியும் காப்பாற்ற முடியாமல் டிசம்பர் 6ம் தேதி இரவு மரணமடைந்தார். இவருக்கு வயது 23.
இவரது மரணம் தொடர்பாக சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர் ஷலாப் குமார் கூறும்போது, “இரவு 11.10-க்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, அவரது உயிரைக் காப்பாற்ற போராடினோம் ஆனால் இரவு 11.40 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது” என்றார்.
அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததால் 90% உடல் தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டிருந்தது என்று கூறும் மருத்துவர் ஷலாப், போராடினோம் ஆனால் காப்பாற்ற முடியவில்லை என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பான தன் வழக்கிற்காக அவர் உன்னாவ் மாவட்டத்தில் சிந்த்பூர் கிராமத்துக்கு வெளியே சில நபர்களால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாக்கப்பட்டார்.
அதன் பிறகு லக்னோவிலிருந்து சிறப்பு ஆம்புலன்ஸ் விமானத்தில் அவர் டெல்லிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார், சிகிச்சையின் போது அவர்களை தப்ப விடாதீர்கள் என்றும், என்னை காப்பாற்றுங்கள் நான் வாழ வேண்டும் என்றும் அவர் கெஞ்சியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரவு 8 மணிக்கு அவர் கொண்டு வரப்பட்ட போது அவர் தன்னுணர்வுடன் இருந்துள்ளார், பேசியுள்ளார்.
அவருக்காக சிறப்பு ஐசியுவில் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு கவனமாக அவரது உடல் நிலை கண்காணிக்கப்பட்டும் காப்பாற்ற முடியாமல் அவர் உயிர் பிரிந்தது கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT