Published : 06 Dec 2019 08:33 PM
Last Updated : 06 Dec 2019 08:33 PM
ஹைதராபாத் என்கவுன்டர் தொடர்பாக தெலங்கானா மாநில காவல்துறை அதிகாரிகள் மீது மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக மும்பையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர்களும் கூறியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் குணரத்ன சதாவர்டே கூறுகையில் ‘‘ஹைதராபாத்தில் என்கவுன்டர் என்ற பெயரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது.
காவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்த 4 பேர் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். இதுபற்றி மனித உரிமைகள் ஆணையம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
தெலங்கானா மாநில காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனித உரிமைகள் ஆணையத்திடம் மும்பை வழக்கறிஞர்கள் புகார் அளிக்கவுள்ளோம். அதுபோலவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் மனு அளிப்போம்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT