Last Updated : 05 Dec, 2019 03:40 PM

 

Published : 05 Dec 2019 03:40 PM
Last Updated : 05 Dec 2019 03:40 PM

''தடைகளே இடையூறுகள்''- பாதியில் நிற்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து நிதின் கட்கரி வருத்தம்

நாடாளுமன்றத்தில் நிதின் கட்கரி | கோப்புப் படம்

புதுடெல்லி

சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெறுவதில் தடைகள் ஏற்படுவதால் நிறைய சாலைத் திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றன என்று நாடாளுமன்றத்தில் நிதின் கட்கரி இன்று வருத்தம் தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றிற்காக பல்வேறு சாலை திட்டங்கள் தடைபட்டு நிற்பதாகக் கூறிய அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கேள்வி நேரத்தின்போது பதிலளித்துப் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் சாதகமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதுதான் இங்கு பிரச்சினை. எல்லோரும் ''வேலையை நிறுத்துங்கள்'' என்று சொல்கிறார்களே தவிர, யாரும் ''வேலையைச் செய்யுங்கள்'' என்று சொல்லவில்லை

அனைத்து எம்.பி.க்களும் அந்தந்த தொகுதிகளில் சாலை திட்டங்கள் குறித்து விழிப்புடன் செயல்பட வேண்டும். பொதுமக்களும் சாலைகள் மற்றும் பாலங்களை அமைக்கும் பாதைகளில் வரும் பிரச்சினைகளை தீர்க்க உதவ வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நாடு ஒரு நேர்மறையான அணுகுமுறையையும் கொண்டிருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைப் பணிகளின் மேம்பாடு என்பது சாலை நீள சீரமைப்பு, செலவு மதிப்பீடுகள், நிலம் கையகப்படுத்துதலின் தேவை போன்றவை அனைத்தும் விவரமான திட்ட அறிக்கை, சாத்தியக்கூறு ஆய்வு, திட்ட நம்பகத் தன்மை, இடை-முன்னுரிமை மற்றும் நிதி கிடைப்பது போன்ற அடிப்படைகளிலிருந்துதான் உருவாக்கப்படுகின்றன. இதுதான் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தும் முறை.

இதில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான செயல்முறைகள் முக்கிய இடையூறுகளாக உள்ளன. இந்தத் தடைகள் களையப்பட்டு சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும்.

நான் சூழலுக்கு ஆதரவானவன். ஆனால் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் அருகருகே செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

பல்வேறு சாலைத் திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.5,35,000 கோடி செலவில் சுமார் 34,800 கி.மீ நீளத்தில் பாரதமலா பரியோஜனா கட்டம் -1 க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களில் சுமார் 9,000 கி.மீ பொருளாதார காரிடார்கள், சுமார் 6,000 கி.மீ பிரதான சாலைகளுக்கு செல்லும் அணுகு சாலைகள், சுமார் 5,000 கி.மீ தேசிய காரிடார்கள், சுமார் 2,000 கி.மீ எல்லை மற்றும் சர்வதேச இணைப்பு சாலைகள், சுமார் 2,000 கி.மீ கடலோர மற்றும் துறைமுக இணைப்பு சாலைகள், மற்றும் சுமார் 800 கி.மீ அதிவேக நெடுஞ்சாலைகள் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் வளர்ச்சியின் அங்கமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x