Published : 05 Dec 2019 07:42 AM
Last Updated : 05 Dec 2019 07:42 AM
106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு புதனன்று ப.சிதம்பரம் திஹார் சிறையிலிருந்து வெளியே வந்தார், காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிறைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், “வழக்கு பற்றி நான் பேச முடியாது. உத்தரவுகளுக்கு கீழ் பணிகிறேன். ஆனால் உண்மையென்னவெனில் 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு எனக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை” என்றார்.
தொண்டர்கள் அதிகம் பேர் சிறைவாசலில் இருக்க, மகன் கார்த்தி சிதம்பரம், தமிழகத்திலிருந்து இரண்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
தன்னை சிறையில் வந்து சந்தித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்க சிதம்பரம், சோனியா காந்தி இல்லத்திற்குச் சென்றார்.
“அவர் வீடுதிரும்புவதில் மகிழ்ச்சி. 106 நீண்ட நாட்கள், விசாரணைக்கு முந்தைய தேவையற்ற ரிமாண்ட். உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்ததில் மகிழ்ச்சி" என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
வியாழக்கிழமையன்று ராஜ்யசபாவுக்கு ப.சிதம்பரம் வருவார் என்று கார்த்தி சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, “டெல்லி போலீஸார் இவரது வீட்டின் சுவர் மீது ஏறிக்குதித்தது இவர் ஏதோ ஒசமா பின் லேடன் உறவினர் என்று அவர்கள் நினைத்தது போல் இருந்தது” என்றார்.
காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறும்போது, “தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிதான். ஜாமீன் இன்னமும் முன் கூட்டியே வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT