Published : 04 Dec 2019 08:47 PM
Last Updated : 04 Dec 2019 08:47 PM
ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை ஏன் கிடப்பில் போட்டீர்கள் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டம் குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பேசியதாவது:
''2013-14 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு இதுவரை உரிய நிதி வழங்கப்படவில்லை. பணிகள் அப்படியே கிடப்பது மட்டுமின்றி - ரயில்வே வாரியம் இந்தப் பணியினை இப்போது மேற்கொள்ள வேண்டாம் என தென்னிந்திய ரயில்வேக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. இது எப்படி நியாயம்?
இந்தப் பாதை அமைக்கும் பணிக்கு 50 சதவீத செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள சம்மதித்திருக்கிறது. இந்தப் பாதையில் மூன்று மிகப்பெரிய தொழிற்சாலை தொகுப்புகள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன என்பது மட்டுமின்றி ஆவடியில் ராணுவத் தளவாடங்கள், டேங்குகள் தயாரிப்பு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.
ஸ்ரீபெரும்புதூரில் அருள்மிகு ராமானுஜர் பிறந்தார். மேலும் இந்தப் பகுதியிலிருந்துதான், காஞ்சிபுரத்தில் இந்து அறநிலையக் கோயில்கள், ராஜீவ் காந்தி நினைவிடம் போன்றவை அமைந்துள்ளன. மேலும் ஒரு திட்டம் நிறைவேற வேண்டுமானால் முதலில் அதிலிருந்து எந்த அளவு வருமானம் வரும் என்றுதான் திறமை வாய்ந்த தொழில் நிபுணர்கள் கணக்கிட்டுப் பார்ப்பார்கள்.
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை 16 சதவீதம் (IRR) லாபம் தரக்கூடிய திட்டம். ரயில்வே துறை ஒரு திட்டத்தை எடுத்துக் கொள்ள 14 சதவீதம் (IRR) இருந்தால் போதும். எதனால் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டீர்கள்? என்பது இதற்கு தெரியவில்லை''.
இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
இதற்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ''மதத்தின் மீது தாங்கள் நம்பிக்கை வைத்து மதம் சார்ந்த இடங்களுக்கு ரயில் பாதைகள் அமைக்க விரும்புவது எனக்கு மிகுந்த திருப்தியும் ஆச்சரியமும் அளிக்கிறது'' என்றார்.
இதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு பேசும்போது, ''அமைச்சர் இந்து சமயக் கோயில்கள் மீது எனக்குப் பற்று வந்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த மதத்திற்கும் விரோதிகள் அல்ல. நாங்கள் நடத்தும் இயக்கம், மதச்சார்பற்ற இயக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT