Published : 03 Dec 2019 08:27 PM
Last Updated : 03 Dec 2019 08:27 PM
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் லாஞ்சர்களை ஏவியும் நடத்திய தாக்குதலில் உள்ளூர்வாசிகள் இருவர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த ஆண்டு மட்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3 ஆயிரம் முறை அத்துமீறி இந்தியப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின் 950 முறை அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீதும், மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஷாப்பூர் மற்றும் கிர்னி செக்டார் பகுதியில் இன்று பிற்பகலில் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று அத்துமீறி துப்பாக்கியால் சுட்டும், சிறிய ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டும் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி தரப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 35 வயது பெண் குல்நாஸ் அக்தர் என்பவரும், 16 வயது சிறுவன் ஷோயிப் அகமது என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர் என்று ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இதுகுறித்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஷாப்பூர் மற்றும் கிர்னி செக்டார் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிக் குடியிருப்புகள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 35 வயது பெண், 16 வயது சிறுவன் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தரப்பில் பலியான விவரம் தெரியவில்லை.
தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT