Last Updated : 03 Dec, 2019 06:08 PM

2  

Published : 03 Dec 2019 06:08 PM
Last Updated : 03 Dec 2019 06:08 PM

சோனியா குடும்பம் மட்டுமல்ல 130 கோடி பேரும் முக்கியம்: எஸ்பிஜி சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது: காங்.வெளிநடப்பு

மாநிலங்களவையில் எஸ்பிஜி திருத்த மசோதாவை அறிமுகம்செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

மாநிலங்களவையில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா இன்று அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

மக்களவையில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு மீது மட்டுமல்ல 130 கோடி மக்களின் பாதுகாப்பு மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. அரசியல் பழிவாங்கல் நோக்கில் எஸ்பிஜி திருத்த மசோதா கொண்டு வரவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர்.

ஆனால் கடந்த 8-ம் தேதி முதல் முறையாக அந்தப் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், இனிமேல் எஸ்பிஜி பாதுகாப்பு என்பது பிரதமருக்கு மட்டும் வழங்கப்படும். அவர்கள் குடும்பத்தினர் பிரதமருடன் அவருடைய அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்தால் மட்டுமே வழங்கப்படும். பிரதமர் பதவியில் இருந்து விலகினால்கூட அரசு ஒதுக்கும் அதிகாரபூர்வ இல்லத்தில் முன்னாள் பிரதமர்கள் வசித்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவருக்கும், அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும் போன்ற திருத்தங்களுடன் சிறப்பு பாதுகாப்பு திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் இன்று காலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரியங்கா காந்திக்கு நேர்ந்த பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பி பேசியிருந்தனர். இது தொடர்பாகத் தனியாக விவாதம் நடத்தவும் கோரி இருந்தார்கள்.

இந்நிலையில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''எந்தவிதமான பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவையும் பாஜக கொண்டுவரவில்லை. இதற்கு முன் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பில் மட்டுமல்ல 130 கோடி மக்களின் பாதுகாப்பிலும் இந்த அரசு அக்கறை கொண்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், ஹெச்.டி.தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெறும்போது எந்தவிதமான விவாதங்களும் நடக்கவில்லை.

எஸ்பிஜி பாதுகாப்பை சமூக அந்தஸ்தாக தனிமனிதர்கள் பார்க்கக் கூடாது. எஸ்பிஜி பாதுகாப்பு என்பது குறிப்பாக பிரதமருக்கு மட்டும் வழங்கப்படுவது, எந்த தனிப்பட்ட மனிதரும் அனுபவிப்பது அல்ல. எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் முடிவு என்பது, அவருக்கு இருக்கும் மிரட்டல்களை அறிவியல்ரீதியான ஆய்வு செய்து முடிவு செய்வதாகும்.

பிரியங்கா காந்திக்கு ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு என்பது குளறுபடியால் ஏற்பட்டது. பிரியங்காவின் சகோதரர் கறுப்பு நிறக் காரில் வருவார் என்று பாதுகாப்புப் படையினரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதேபோன்ற கறுப்பு நிறக் காரில் காங்கிரஸ் தொண்டர்கள் வந்துள்ளார்கள். அதனால் பாதுகாப்புப் படையினர் அந்தக் காரை ஆய்வு செய்யவில்லை. இது தற்செயலாக நடந்தது. பாதுகாப்புக் குறைபாடு அல்ல

இருப்பினும் பாதுகாப்பு விதிமுறை நடந்தது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு உயர்ந்த அந்தஸ்து பெற்ற இசட் பிளஸ் பாதுகாப்பு, ஆம்புலன்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

ஆனால், அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விளக்கத்தை ஏற்காமலும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், இடதுசாரிகள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x