Last Updated : 03 Dec, 2019 03:11 PM

 

Published : 03 Dec 2019 03:11 PM
Last Updated : 03 Dec 2019 03:11 PM

மேட்டுப்பாளையம் சம்பவம்: மத்திய அமைச்சர் கெலோட்டிடம் சு.வெங்கடேசன் எம்.பி. மனு

சு.வெங்கடேசன் மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலோட்டை நேரில் சந்தித்து மனு அளித்தார்

புதுடெல்லி

மேட்டுப்பாளையம் சம்பவத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்.பியான சு.வெங்கடேசன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலோட்டை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் மத்திய அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
‘‘கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரின் அருகில் உள்ள நாடூர் கிராமத்தில் நேற்று 17 தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலித் மக்களை தடுப்பதற்காக சட்டவிரோதமாக 22 அடி உயர பிரம்மாண்டமான சுவர் ஒன்று சிவசுப்பிரமணியம் என்னும் துணிக்கடை அதிபரால் கட்டப்பட்டிருந்தது.

இச்சுவர் தலித் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் வீடுகளின் மீது இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளின் அடியில் உயிரோடு புதைந்து போயிள்ளனர்.

இக்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு நாகை திருவள்ளுவன் உள்பட செயற்பாட்டாளர்களும் மற்றும் உறவினர்களும் போராடியபோது தமிழ்நாடு காவல்துறை அவர்களை கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது. ஆனால் தீண்டாமை சுவரை கட்டியவரும் இக்கொடூரச் சாவுகளுக்கு காரணமானவரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

இங்கு, உடனடியாக எஸ்.சி ஆணையத்தின் தலைவரை நாடூர் கிராமத்தில் நடந்த சம்பவத்தை ஆய்வு செய்ய அனுப்பிட வேண்டும். எஸ்.சி. ஆணையத்தின் தலைவரிடம் காவல்துறையின் கொடூரத்தையும் 17 தலித் மக்கள் இறந்தது குறித்தும் முழு அளவிலான விசாரணை செய்திட உத்தரவிட வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் படி தொடர்ச்சியாக நடத்த வேண்டிய கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்திடுமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்ள வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் படி மாவட்ட அளவில் தொடர்ச்சியாக கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் படி சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x